தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கிறது: அண்ணாமலை

தி.மு.க., தேர்தல் அறிக்கையையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கிறது என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இன்று நடைபயணம் மேற்கொண்டார். சுவாமியார் மடத்தில் காலையில் நடைபயணத்தை துவக்கி, மணலி ஜங்சனில் நிறைவு செய்தார். அப்போது, அண்ணாமலை பேசியதாவது:-

பத்மநாபபுரம் எம்.எல்.ஏ., ஆக மலை முழுங்கி மனோதங்கராஜ் இருக்கிறார். குமரி மண்ணில் இருந்து மலையை வெட்டி 600 லாரிகளில் தினமும் கேரளா கடத்தி செல்லப்படுகிறது. மலையை சட்டவிரோத குவாரி மூலம் வெட்டிச்செல்வதால் இயற்கை தன் தன்மையை இழந்து வருகிறது. கனிம வள கடத்தலுக்கு எதிராக தமிழக அரசு ஜூலை 23ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதனால், கனிமவளம் கேரளாவுக்கு செல்லாது என்றார் மனோ தங்கராஜ். சிலர் தூண்டிவிட்டு லாரி உரிமையாளர்கள் வழக்கு போட்டு ஐகோர்ட்டில் தடை போட்டார்கள். செந்தில் பாலாஜியை விசாரிக்ககூடாது என சுப்ரீம் கோர்ட்டில் போய் ஒரு மணி நேரத்துக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து வக்கீல் வைத்தார்கள். கனிமவள கடத்தலை தடுக்க ஏன் மனோதங்கராஜ் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகவில்லை. பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடும் செயல் இது.

தமிழக செக்போஸ்டை தாண்டி தினமும் 600 லோடுக்கும் மேல் கனிமவளம் செல்கிறது. அதற்கு பரிசாக கேரளம் அங்குள்ள மருத்துவக் கழிவுகளை கொண்டு தென்காசியில் கொட்டுகிறார்கள். நம் பொருளை அவர்களுக்கு கொடுத்து அங்குள்ள பிரச்னையை நம் தலைமீது வைத்துக்கொள்வது போன்ற செயல் இது.
மனோதங்கராஜ் கனிமவளத்தை கொண்டு போவதையும், பிரதமரைப்பற்றி முகநூலில் போடுவதையும் மட்டும்தான் செய்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமராக வருவார். கன்னியாகுமரியில் இருந்து அவரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும்.

குமரியில் சிறப்பாக விவசாயம் நடக்க மத்திய அரசின் திட்டங்கள்தான் காரணம். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 35-வது வாக்குறுதியில் வாழைப்பழத்துக்கு குறைந்தபட்சம் ஆதாரவிலை கொடுப்பதாக சொன்னது. நெல் குவிண்டலுக்கு 2500 ரூபாய், கரும்பு டன்னுக்கு 4000 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். அதை செய்யவில்லை. விவசாயிகளுக்கு விரோதியான ஆட்சி இது. காமராஜர் 12 அணைகள் கட்டினார்கள். ஆனால், கால்வாய் தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்கியும் மாநில அரசு தூர்வாராமல் உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடு கட்டிக்கொடுப்பேன் என்றார். நான் இன்று செங்கல் கொண்டுவரவில்லை. திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் மதத்தை வைத்து ஓட்டுவாங்க பார்க்கிறார்கள். எதிர்கட்சிகள் இந்தியா என பெயர் வைத்ததில் இருந்தே அவர்களுக்கு சரியில்லை. 1960ல் முழுமையாக பிரிவினை பேசிவிட்டு, தனி தமிழகம் வேண்டும் என சொல்லிவிட்டு இந்தியா என பெயர் வைத்துள்ளார்கள்.

பிரதமருக்கு இந்தியாதான் வீடு. அவர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து 11-வது முறையாக கொடி ஏற்றிவிட்டு பத்தாண்டு பா.ஜ., ஆட்சி சாதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவார். தேசபக்தர்களுக்கும் பிரிவினைவாதிகளுக்குமான தேர்தல். சாமானியனுக்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குமான தேர்தல்.

ராமநாதபுரத்தில் மீனவர் மாநாடு போடுகிறார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 85 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். மோடி ஆட்சிக்கு வந்தபிறகு யாரும் சுட்டுக்கொல்லப்படவில்லை. மீனவர்களை பாதுகாப்பவர் மோடி. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக மீனவர்களுக்காக ஒரு அமைச்சகம் கொண்டுவந்தார். அதில் முதல் இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன் கொண்டு வரப்பட்டார். இவ்வாறு அவர் பேசினார்.