அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் சாதி வந்து விட்டது: சரத்குமார்

நடிகர் சரத்குமார் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாழாய் போன அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் சாதி வந்து என்று கோபமாக பேசி இருக்கிறார்.

நடிகர் சரத்குமார் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சாதிவெறியில் சக மாணவரை தாக்கியது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், நான் இப்ப எல்லாம் மேடை நிகழ்ச்சிகளுக்கு கூலிங் கிளாஸ் போட்டுட்டு வரமாட்டேன். காரணம் நல்லா இருக்கு என்று சொன்னா கழட்டி கொடுத்துடுவேன். அதனால நான் பெருமையாவே சொல்லுகிறேன். நான் கர்ணன் பரம்பரையைச் சார்ந்தவன். என்கிட்ட இருந்தா கொடுப்பேன் இல்லன்னா பக்கத்து வீட்டுல வாங்கி கொடுத்துடுவேன். தாயின் வயிற்றில் கருவுற்றிருக்கும் குழந்தை எந்த ஜாதியில் பிறக்கப் போகிறாய். எந்த மதத்தில் பிறக்கப் போகிறாய். எந்த மொழி பேசுகிறவனாய் பிறக்கப் போகிறாய் என்று தெரிந்து பிறப்பதில்லை. அதுபோல பள்ளி பருவத்தில் ஜாதி தெரியாது. மச்சான் இந்த பாலை நான் அடிக்கிறேன் டா என்று சொல்லுவான். கல்லூரி நாட்களில் தெரியாது மச்சான் இந்த படம் வந்திருக்கு முதல் நாளே போய் பார்க்கலாம் வா என்று சொல்லுவான். ஆனால் இந்த பாழாய் போன அரசியலுக்கு வந்த பிறகு தான் எனக்கும் ஜாதி வந்துவிட்டது. ஆனால் எனக்கு வந்ததால் எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை. எங்க அப்பா சொல்லிக் கொடுத்தது மனித ஜாதி தான். எங்க அப்பா நான் என்ன ஜாதி என்று எனக்கு சொல்லாத போது நான் அரசியலுக்கு வந்தபோது அது எனக்கு தெரிய வந்துடுச்சு. அதுக்கு ஒரு முத்திரை குத்தி என்னை இப்படி ஆக்கிட்டாங்க.

ஒரு விழாவுக்கு போயிருந்தேன். என் 40 கால நட்பு என்னுடைய நண்பன் ஒருவன் என் கூடவே இருக்கான். அவன் நான் சார்ந்த அந்த ஜாதியை சார்ந்தவன் அல்ல. அப்போ ஒரு முக்கியஸ்தர் வீட்டிற்கு நாங்கள் சென்றிருக்கும் போது தம்பி நீங்க திருநெல்வேலி பக்கமா என்று கேட்க, அதற்கு இல்லங்க எனக்கு செங்கல்பட்டு பக்கம் என்று சொல்ல, அப்ப நீ நம்ம ஆளா? நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க அவரு கூட என்று கேட்கிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான கருத்துக்களை எல்லாம் நான் சகித்துக் கொண்டு இருந்தேன்.

நாங்குநேரி பிரச்சனையை கேட்டு நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். நிறைய படிச்சிருந்தும் பலர் இந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் இருக்காங்க. இறைவனின் படைப்பில் நாம் எல்லோரும் ஒன்று என்று நினைக்கிறோமோ, உணர்கிறோமோ அன்னைக்கு மனிதர்கள் எல்லாரும் ஒன்று என்று சமத்துவத்தை நினைக்கிறோமோ அப்போதான் நாடு முன்னேறும். சரத்குமார் வந்து ஒரு கேள்வியை கேட்கிறான் என்றால் பலர் நீங்க அந்த ஆளு தானே என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுகிறார்கள். அதில் என்னுடைய இத்தனை வருட அனுபவம், அழகு, திறமை, இன்டெலிஜென்ட் எல்லாமே அடிபட்டு விடுகிறது. நான் 16 வருடங்களாக ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் இவன் கலர் என்ன இவன் யாரு என்று முடிவு பண்ணுறாங்க. ஜாதியை சொல்லி இன்னாரு என்று அடையாளப்படுத்தும் போது நமக்கு சுருக்கென்று தைக்கும். அதனால் மக்களாக புரிந்து அந்த மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார்.