சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதற்காகவே கவர்னர் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் சொல்லவில்லை என ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை மகாஜன சபை சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்று முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு மகாஜன சபையின் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதேபோல, 138 வருட சென்னை மகாஜன சபை வரலாற்றுச் சுருக்கம், உன் அரும்பெரும் லட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும் ஆகிய 2 புத்தகங்களையும் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட அதை ஜி.கே.வாசன் எம்.பி. பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், தமிழருவி மணியனுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது. இதேபோல, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினியுடன் சந்திப்பு நடிகர் ரஜினிகாந்த் போன்ற ஒரு மனிதரை நான் கண்டதில்லை. மனிதநேயத்தின் அடையாளமாக அவர் திகழ்கிறார். அவருடைய சந்திப்பு என்பது 2 நண்பர்களுக்கு இடையேயான சந்திப்பு மட்டுமே. இதில் வேறு ஏதும் நாங்கள் பேசவில்லை. நீட் தேர்வு போன்று எதுவெல்லாம் முடியாதோ அதையெல்லாம் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கக்கூடாது. கவர்னரை வேண்டும் என்றே குறை சொல்வது தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு வேலையாக போய்விட்டது. நீட் கொண்டுவருவதற்கு முன்பாகவே மருத்துவ இடங்கள் விற்பனை செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது என்பதற்காகவே கவர்னர் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் எங்கும் சொல்லவில்லை. கவர்னர் என்பவர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தன்னுடைய முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.