உண்மையை கேக்கக் கூடிய காதுகளை தேடிக்கொண்டே இருப்பேன்: மாரி செல்வராஜ்

உண்மையை கேக்கக் கூடிய காதுகளை தேடிக்கொண்டே இருப்பேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

‘மாமன்னன்’ படத்தின் 50-வது நாளையொட்டி இயக்குநர் மாரிசெல்வராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாமன்னன் 50-வது நாள். பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும் அதற்குள் அறத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த அளப்பரிய வெற்றியை சமர்பிக்கிறேன் . “உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” என பதிவிட்டுள்ளார். மேலும், அத்துடன் தன் அம்மா, அப்பாவுடன் இருக்கும் ஓவியம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், உருவான படம் ‘மாமன்னன்’. நேற்று (ஆகஸ்ட்17) இப்படத்தின் 50ஆவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் “மாமன்னன் 50வது நாள். உதயநிதி அழைத்து என் கடைசி படம் எடுத்து தாருங்கள் என்றார். அவர் கேட்டது போல் நல்ல படத்தை எடுத்து தந்து விட்டேன். அதற்கு ஒத்துழைத்த படக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. ஒன்றே ஒன்று தான் சொல்ல ஆசை, நான் பாடிக்கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம். ஆனால் அதை என் வாழ்நாள் முழுதும் பாடிக்கொண்டிருப்பேன், என் வயிற்றிலிருந்து குடலை உருவி அதை யாழாக மாற்றி தெருத்தெருவாக மீட்டி வருவேன், உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் நன்றி” என பேசியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், “சந்தோசமாக உள்ளது. மாமன்னன் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதுக்கு மக்களே காரணம்” என்றார். அப்போது, நாங்குநேரி சம்பவதுக்கு சாதிய எண்ணம் கொண்ட திரைக்கலைஞர்கள் காரணம் என்று பேச்சு எழுகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு, “என்னுடைய மூன்று படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது. எதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார்.

தொடர்ந்து ரத்னவேலு கதாபாத்திரம் தவறாக கொண்டாடப்பட்டது குறித்த கேள்விக்கு, “தவறாக கொண்டாடியவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். எல்லா படைப்புகளும் உருவாக்கப்பட்டது மக்களிடம் கொண்டுச் சேர்க்கதான். மக்களிடம் படைப்புகள் எப்படி சென்றாலும் சரி. ஒரு திரைப்படம் என்பது நான்கு நாட்களில் முடிந்துவிடுவது கிடையாது. ஆண்டுக்கணக்கில் திரைப்படங்கள் பேசும். நான்கு நாட்களில் பேசப்படுவதை வைத்து முடிவு செய்ய முடியாது. படங்கள் பேசப்பட்டு கொண்டே இருக்கும். கதாப்பாத்திரங்கள் உருமாறும். நிறம் மாறும். இறுதியில் அந்த பாத்திரங்கள் அதன் நிலையை அடையும். படம் பார்க்க பார்க்க அதன் உண்மையை பேசும்” என்று தெரிவித்துள்ளார்.