காவிரி மேலாண்மை ஆணையம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: டிகே சிவகுமார்

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்போவதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா காவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீர் திறந்துவிட உத்தரவிட்டார்.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிகே சிவகுமார், “தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகாவிலேயே தற்போது கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. சில பகுதிகளில் கடும் வறட்சிகூட ஏற்பட்டுள்ளன. இருந்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி கடந்த 4, 5 நாட்களாகவே நாங்கள் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். இருப்பினும் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் விவகாரத்தில் தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம், ஏனெனில் இதனால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது” என்றார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தில் சரியான வாதங்களை முன்வைக்காமல் கர்நாட்க விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.

கர்நாடகா மற்றொரு முன்னாள் முதல்வரான குமாரசாமியும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில், தமிழ்நாடு பாசனப் பரப்பை ஆண்டுதோறும் விரிவாக்கம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட தேவை இல்லை. கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்துவிட்டது தவறு. உச்சநீதிமன்றம், காவிரி நீரை திறக்க உத்தரவு பிறப்பிக்காத நிலையில் கர்நாடகா அரசு ஏன் இப்படி செய்தது? தமிழ்நாடு அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு அலட்சியமாக இருந்து வருகிறது. கர்நாடகா அரசும் உச்சநீதிமன்றத்துக்கு சென்று தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துகளை உடனே முன்வைக்க வேண்டும். காவிரி பிரச்சனையில் ஆளும் காங்கிரஸ் அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என காட்டமாக கூறியுள்ளார்.