கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களா? அன்றைக்கு சர்க்காரியா கமிஷனில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பயந்து வாய் மூடி மவுனமாக இருந்து விட்டு தற்போது நாடகம் ஆடுகின்றனர் என திமுகவை விமர்சித்து ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ராமஸ்வேரம் அருகே உள்ள மண்டபத்தில் இன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷயத்தை எப்போதும் அதிமுக தெளிவாக செய்கிறது என அதிமுகவையும் கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். ஜெயக்குமார் கூறியதாவது:-
மீனவர் மாநாடு என்று கூறுவதே தவறு.. இது திமுக மாநாடு. இதில் மீனவர்கள் எங்கே பங்கேற்றார்கள். அமலி நகரில் இன்று கூட கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அது மட்டும் இல்லை தென் மாவட்டத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. மாநாடு என்று அரசு நிகழ்ச்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். கூசாமல் பொய் பேசுவதையே வாடிக்கையாக கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் இப்போதும் பொய் பேசுகிறார். 1974ல் கச்சத்தீவை யார் தாரை வார்த்தது என்று சொல்லுங்கள். அவரது தந்தைதானே முதல்வராக இருந்தார். கச்சத்தீவை கொடுக்க மாட்டோம் என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்களா? அன்றைக்கு சர்க்காரியா கமிஷனில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்று பயந்து வாய் மூடி மவுனமாக இருந்து விட்டு அதற்கு பிறகு ஒரு நாடகம்.
ஜெயலலிதா ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். சுதந்திர தினத்தில் 1991 ஆம் ஆண்டு கொடியேற்றி விட்டு கச்சத்தீவை மீட்பேன் என சபதம் ஏற்றுவிட்டு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். வாய்கிழிய பேசும் முதல்வர் மு.க ஸ்டாலின், இதுவரையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்போம் என ஒரு தீர்மானமாவது போட்டு இருக்கிறாரா? ஒரு தீர்மானம் கூட போடவில்லையே.. ஜெயலலிதா போராட்டம் நடத்தி.. வேறு வழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெயரிலேயே வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில் அதில் மனுதாரரா ஏன் திமுக சேரவில்லை. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. உச்ச நீதிமன்றத்திலும் ஒரு பார்ட்டியாக சேரவில்லை. மீனவர்கள் ஏமாந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.