நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குனர் கவுதமனுக்கு அரியலூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் மாணவி அனிதாவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதாவின் தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக நல அமைப்புகளும் அப்போது போராட்டங்களை நடத்தியது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ் பேரரசு கட்சியின் சார்பில் சினிமா டைரக்டர் கவுதமன் தலைமையில், போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கவுதமன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இது தொடர்பான வழக்கு, அரியலூர் மாவட்டம் செந்துறை உரிமையியல், குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணைக்காக இயக்குனர் கவுதமன் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்த போதும் இயக்குனர் கவுதமன் நேரில் ஆஜரகாவில்லை. இதையடுத்து, கவுதமனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.