ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் வெறுப்பு அரசியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
நாங்குநேரி பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரி தாக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
நாங்குநேரி விவகாரத்தை கண்டித்து 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த விவகாரத்தை கண்டிப்பதுடன் ஆட்சியாளர்களிடம் எடுத்துச்செல்லவேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு அதிகம் உள்ளது. மாணவர்களிடையே சாதி ஆதிக்கம் உள்ளது வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை சாதி வெறியர்களாக சித்தரிப்பதா? என்ற குழப்பம் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் எதிர்காலம் உள்ளது. அவர்களுக்கும் கல்வி கிடைக்கவேண்டும். இந்த சாதி வெறியில் இருந்து மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்பது எனது எண்ணம். எங்களுடைய கோரிக்கை தாக்குதலில் ஈடுபட்ட மாணவரின் வாழ்க்கையை சீரழிப்பது அல்ல. அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில்லை. அந்த மாணவரும் எதிர்காலத்தில் முற்போக்கு சிந்தனை உள்ள நபராக மாறலாம். தனது தவறை உணரலாம்.
1999-ம் ஆண்டு பெட்ரோல் கேன்களுடன் கிராமந்தோறும் சென்று சேரிகளை எரித்து நாசம் ஆக்கியவர்கள் 10 ஆண்டுகள் கழித்து 2009-ம் ஆண்டு என் தம்பி திருமாவளவன், எங்கள் கைகள் இணைந்துவிட்டது இனி எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது என சொல்லுகிற நிலை வந்தது. எனவே தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தண்டிக்கவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. மாறாக இதை மாணவர்களிடம் பரப்பிய நபர்கள் யார்? அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்யவேண்டும்.
நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், நாங்குநேரி விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்யவேண்டும். மேலும் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதற்கு ஏற்ப அதிகாரம் வழங்கி, ஆய்வு பரப்பை விரிவுப்படுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் செய்துதர முன்வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.