தமிழகத்துக்கு துரோகம் இழைத்த கட்சி என்றால் அது திமுக தான்: சிவி சண்முகம்

தமிழகத்தின் வாழ்வாதாரம், அனைத்து பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று சிவி சண்முகம் கூறினார்.

ராமஸ்வேரம் அருகே உள்ள மண்டபத்தில் நேற்று முன் தினம் மீனவர் நல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பேசிய, முதல்வர் மு.க ஸ்டாலின் கச்சத்தீவுக்காக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுகதான் என்றும், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் விஷயத்தை எப்போதும் அதிமுக தெளிவாக செய்கிறது என்றும் அதிமுகவையும் கடுமையாக சாடினார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், கச்சத்தீவை மீட்க திமுக என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்றும், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை மேற்கொண்டார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கச்சத்தீவு விவகாரத்தில் முக ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சிவி சண்முகம் கூறியதாவது:-

திமுக எப்போதெல்லாம் தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருக்கிறதோ.. காங்கிரஸ் எப்போது எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறதோ.. அதனுடன் திமுக கூட்டணி வைத்திருக்கும்போது எல்லாம், வரலாற்றை எடுத்து பார்த்தால், தமிழகத்தின் வாழ்வாதாரம், அனைத்து பிரச்சினைகளிலும் தமிழகத்துக்கு துரோகம் இழைத்த கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான். காவிரி நதி நீர் பிரச்சினை, விவசாயிகள் போட்ட வழக்கை காங்கிரசின் அச்சுறுத்தலுக்காக அந்த வழக்கை முதன் முதலாக திரும்ப பெற்றது கருணாநிதி. இன்று கட்சத்தீவை மீட்பதாக வாய் கிழிய பேசும் ஸ்டாலின், அந்த கட்சத்தீவை விட்டுக்கொடுத்தது யார்?.. அன்றைக்கு முதல்வராக இருந்தது யார்?.. உங்கள் தந்தை கருணாநிதி தான்.. கட்சத்தீவை விட்டுக்கொடுத்த போது நான் காலையில் பேப்பரை பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்றார். இப்படி ஒரு முதல்வரை நாடு பார்த்ததில்லை. ஆனால் அதே முதல்வர் கருணாநிதி, ஆட்சியை இழந்த பிறகு டெசோ மாநாட்டில் என்ன சொல்கிறார் என்றால், கட்சத்தீவை விட்டுக்கொடுத்த போது பேப்பரை பார்த்து தெரிந்துகொண்டதாக கூறிய கருணாநிதி அந்த மாநாட்டில் நான் போராடி இந்திரா காந்தியிடம் கட்சத்தீவிலே மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுக்கொடுப்பேன் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்தாரா? இல்லையா? ஆனால் இன்று வாய் கிழிய பேசுகிறார் ஸ்டாலின் நான் கட்சத்தீவை மீட்பேன் என்று..

கட்சத்தீவை விட்டுக்கொடுத்த பிறகு கருணாநிதி 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். 1989, 1996, 2006 ஆகிய 3 முறை முதல்வராக இருந்தும் கட்சத்தீவை மீட்டெடுக்க ஏதேனும் முயற்சி மேற்கொண்டாரா? நடவடிக்கை எடுத்தாரா? ஆனால் எங்களுடைய முதல்வர் ஜெயலலிதா 2008 இல் தன் பெயரில் உச்சநீதிமன்றத்தில் கட்சத்தீவு என்பது இந்தியாவின் பகுதி, அதை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திய அரசியல் அமைப்பின் படி செல்லாது என்று கூறி வழக்கை தொடர்ந்தார். அன்றைக்கு முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அப்போது அவர் என்ன செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு சார்பாக அந்த வழக்கில் தன்னை இணைத்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் தானும் சேரவில்லை, வழக்கிலும் இணைந்துகொள்ளவில்லை.. ஆனால் முதல்வர் பதவி போன பிறகு 2011-இல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு அந்த வழக்கிலே வருவாய் துறையை இணைத்தார். அதற்கு பிறகு எதிக்கட்சி தலைவராக வந்த பிறகு அந்த வழக்கில் தன்னை இணைத்துகொண்டார்.

உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால்.. கட்சத்தீவை உண்மையிலேயே மீட்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். கருணாநிதி இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. அவர் இறந்த பிறகு அவருக்கு பதிலாக யாராவது ஒருவர் அந்த வழக்கில் இணைந்திருக்க வேண்டுமா?.. இல்லையா?.. ஆனால் நான்கு அரை ஆண்டு காலமாக தூக்கத்தில் இருந்துவிட்டு.. அதைப்பற்றி கவலை இல்லாமல் இருந்துவிட்டு.. இன்று நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதாலும், பாரத பிரதமர் கட்சத்தீவு பற்றி பேசியதை தெரிந்த உடனே.. நாங்கள் போட்ட வழக்கு விசாரணைக்கு வர இருப்பதை பார்த்துக்கொண்டு தற்போது அதாவது கடந்த மார்ச் மாதம் தான் அந்த வழக்கில் திமுக இணைந்திருக்கிறது. இது தான் ஸ்டாலினின் இரட்டை வேடம். இவ்வாறு சிவி சண்முகம் பேசினார்.

மதுரையில் மாநாடு நடக்கும் நேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய சிவி சண்முகம், “உங்க தாத்தாவையே பார்த்தாச்சு.. உங்களை விட கதை, திரைக்கதை வசனம் எழுதிய கருணாநிதியையே நாங்கள் பார்த்துவிட்டோம்.. இந்த உண்ணாவிரத போராட்டம் எல்லாம்” என்று பேசினார்.