காவிரி விவகாரம் தொடர்பாக வருகிற புதன்கிழமை கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாளை(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
இதனிடையே காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார். இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று அறிவித்தார். கூட்டத்தில் மூத்த எம்.பி.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.