இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி

இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை. இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று ராகுல்காந்தி கூறினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறும்போது, “அவரது பிறந்தநாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது அஞ்சலி” என்று குறிப்பிட்டு உள்ளார். டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் வீர்பூமி பகுதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி லடாக்கில் இருக்கிறார். அவர் பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் ராகுல்காந்தி பேட்டி அளித்தபோது, இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

லடாக் மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் அங்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தங்களது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து இங்குள்ள உள்ளூர்வாசிகள் கவலைப்படுகிறார்கள். தங்களது மேய்ச்சல் நிலத்தை சீனப்படையினர் அபகரித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒரு அங்குலம் நிலத்தைகூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். அவர் சொல்வதில் உண்மையில்லை. இங்கே நீங்கள் யாரிடமும் இதை கேட்கலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது தந்தையுடன் பாங்காங் டிசோ பகுதிக்கு வந்து இருக்கிறேன். இது பூமியின் மிக அழகான இடம் என்று அவர் என்னிடம் கூறினார். இந்திய ஒற்றுமையை நடைபயணத்தின்போது நான் லடாக் வர திட்டமிட்டு இருந்தேன். ஆனால் சில காரணங்களால் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் நான் பின்னர் இங்கு வந்து தங்கலாம் என்று நினைத்தேன். நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலுக்கும் நான் செல்வேன். இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

ராகுல் காந்தியின் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பவார் கேரா தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், “வேறு எந்த பிரதமராக இருந்தாலும் இந்த பகுதிக்கு சென்று சீனாவுக்கு ஒரு வலுவான மேசேஜ் கொடுத்து இருப்பார். ஆனால், நமது பிரதமர் மோடி நற்சான்றிதழ் கொடுத்து கொண்டு இருக்கிறார். சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் மிகவும் தேவையான ஒரு செய்தியை அனுப்பிய ராகுல் காந்திக்கு நன்றி. இது நமது நிலம்” என்று பதிவிட்டுள்ளார்.