லடாக்கில் இந்திய பகுதியை சீனா அபகரித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியிருப்பதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் மேய்ச்சல் நிலத்தை சீன ராணுவம் அபகரித்து இருப்பதாக குற்றம் சாட்டினார். லடாக்கில் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியது தவறு என்றும் அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பா.ஜனதா, அவரது கருத்துக்கு கடும் கண்டனமும் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
ராகுல் காந்திஜி, லடாக் பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் தவறானது. உங்கள் முழு அறிக்கையையும் கட்சியின் சார்பில் நான் கண்டிக்கிறேன். கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். கல்வானில் நமது வீரர்களின் அடிபணியா வீரத்தால், சீனா பின்வாங்கியது. இது உண்மையா? இல்லையா? லடாக்கில் சென்று இந்தியாவை ஏன் அவதூறு செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் சீனாவின் பிரசார எந்திரமாக மாறுகிறீர்கள்? நீங்கள் எல்லைப் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் ஏதாவது ஒன்றைச் சொல்லி, இந்தியாவுக்கு எதிராக சீனாவிடம் பிரசாரம் செய்கிறீர்கள். இதுதான் உங்கள் இயல்பு. இந்தியாவின் பாதுகாப்பின் தேவைகளை நீங்கள் எவ்வளவு புரிந்துகொள்கிறீர்கள்? என்பது குறித்து நாங்கள் உங்களுடன் விவாதிப்போம். ஆனால் பாதுகாப்பு விஷயங்களில், இந்தியாவின் மன உறுதியை பலவீனப்படுத்தாதீர்கள். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.