ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க இன்றே ஒரு அமர்வினை அமைப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்தகி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகினர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கான ஆகஸ்ட் மாத காவிரி நீர் பங்கீடு தொடர்பான மனு மிகவும் அவசரமாக விசாரிக்கப்படவேண்டியது. நீதிபதிகள் அதற்காக ஒரு அமர்வை அமைக்க வேண்டும் என்று ரோக்தகி தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த தலைமை நீதிபதி, “இன்றே நான் ஒரு அமர்வினை அமைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், கடந்த ஆக.11 அன்று காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆணையம் தன்னிச்சையாக அடுத்த 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால்போதும் என உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதமானது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல்.
மேலும், தமிழகத்துக்கு கர்நாடகம் நடப்பாண்டில் கடந்த ஜூன் 1 முதல் இம்மாதம் ஆக.11 வரை 53.27 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் வெறும் 15.79 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இதுவரை கிடைத்துள்ளது. பற்றாக்குறையான 37.48 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என 2 குழுக்களும் சேர்ந்து தான் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 2 குழுக்களும் இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை.
வறட்சி காலங்களில் தண்ணீரை எவ்வாறு தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக்கொள்ள வேண்டுமென்ற கொள்கையையும் வகுக்கவில்லை. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக மாநிலம் வெளிகொண்டலு நீர் தேக்கத்தில் இருந்து தமிழகத்துக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும், செப்டம்பர் மாதத்தில் திறந்து விட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தது.
இந்நிலையில், ஆக.18 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோக்தகி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டார். ஆனால், இந்த முறையீட்டை பதிவுத்துறையில் முன்கூட்டியே பதிவு செய்து அதன்பின்னர் முறையிட நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன்படி இன்று தமிழக அரசு மீண்டும் முறையீடு செய்தது.