நீட் எதிர்ப்பு போராட்டம் என்ற திமுகவின் நாடகத்துக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏ-மான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக திமுக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது. மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், மருத்துவக் கல்வியின் தரம் குறைந்து விடக்கூடாது. அதே நேரத்தில் திறமையான மாணவர்களின் மருத்துவர் கனவும் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது.
தமிழக மாணவர்களின் பங்கேற்பும், தேர்ச்சியும் அதிகரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. அது மட்டுமல்ல ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வு இருக்காது என திமுகவினர் பிரசாரம் செய்கின்றனர். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு சில மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். திமுக தொடங்கப்பட்டபோது, அக்கட்சியின் முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இப்போது மூன்றாவது தலைமுறை நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.