தி.மு.க.வின் பல்வேறு மக்கள் விரோத போக்கால் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவன தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவேரி நதி நீர் பிரச்சினை என்பது தஞ்சை டெல்டா பகுதிக்கு உயிர் பிரச்சினை. கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்திய அளவில் தமிழக மாணவர்கள் வருடத்திற்கு வருடம் மற்ற மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அறிவு திறனில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களது அறிவு திறனை பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு தமிழக கல்விதுறை ஊக்கம் அளிக்க வேண்டும். ஆனால் ஊக்கம் அளிக்காமல் பின் தள்ள நினைக்கிறது. மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியது கல்வி துறையின் கடமை ஆகும். எல்லா மாணவர்களும் நன்கு படித்து தேர்ச்சி அடைய வேண்டும். தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் மாணவர்களின் நன்மை கருதி வேறு துறையில் வாய்ப்பை ஏற்படுத்தி தர ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன் வர வேண்டும். நீட் தேர்வால் மாணவர்கள், பெற்றோர் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்த கூடாது.
தி.மு.க.வின் பல்வேறு மக்கள் விரோத போக்கால் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. பாராளுமன்றத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தேசிய அளவில் அ.தி.மு.க. பெரிய கட்சியாக திகழ்கிறது. அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் லட்ச க்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது அ.தி.மு.க.வின் பலத்தை பறைசாற்றுகிறது. இது கூட்டணிக்கு மிகப்பெரிய வலுவை சேர்த்து வெற்றியை சேர்க்கும். அ.தி.மு.க., பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான அங்கீகாரத்தை இந்த மாநாடு எடுத்துகாட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.