சென்னை வேளச்சேரியில் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கிறது. மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள்தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி – வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரி, சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகிறது. கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில், இன்று கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருநானக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரியவரக்ள் என்ற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே இந்த சண்டை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் இன்று கல்லூரியில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு தரப்பு மாணவர்கள் நாட்டு வெடி குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்து 4 மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வேளச்சேரி கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டத்துக்கு உரியது என்றும், மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.