60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க ரெடியாகிட்டாங்க: டி.ராஜா

பா.ஜ.க அரசு, 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க திட்டமிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ கட்சியின் அகில இந்திய அளவிலான 24-வதுமாநாடு, அக். 14 முதல் 18 வரை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ன் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவிப்பதற்கும், அதற்கான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைத் திரட்டுவதற்கும் தொடக்கமாக இந்த மாநாடு அமையும்.

பாஜக ஆட்சியில் கடுமையான பிரச்சனைகளாக உருவெடுத்திருக்கும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களின் கருத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காக மே 25 முதல் 31-ம் தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிசக் கட்சிஆகிய 5 கட்சிகள் இணைந்து அறிவித்திருக்கிறோம்.

மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பா.ஜ.க அரசு தயாராக இல்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மூடி மறைக்க மதவெறி அரசியலை பின்பற்றுகிறார்கள். 60 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நிதி ஆயோக்கின் அதிகாரிகள் குழு 60 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு அடையாளம் கண்டுள்ளது.

பணவீக்கத்தால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பாஜக அரசு மதவாத அரசியலை பயன்படுத்தி ஞானவாபி மசூதி பக்கம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது. பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல. பா.ஜ.க ஆட்சியை அகற்ற, இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள் என அனைவரும் இணைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும். பா.ஜ.க அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக பல்வேறு இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு டி.ராஜா கூறினார்.