கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய முடியாது. 2 சதவீதம் ஏதாவது அதிசயம் நடந்தால் உண்டு என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்ற மாணவன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டார். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு காரணமாக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் மீண்டும் வலுபெறத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளட்டும் என்கிறேன். அப்படித்தான் சொல்லுவேன். டாக்டராக இல்லாதவர்கள் எல்லாம் இந்த உலகத்தில் வாழவில்லையா? கேட்டா சின்னப் பசங்கனு சொல்ல வேண்டியது. சின்னப் பசங்கனா என்ன மூணாவது, நாலாவது படிக்கிற குழந்தைகளா அவங்க? டாக்டராக இல்லாதவர்கள் எல்லாம் இந்த உலகில் வாழ தகுதி இல்லாதவர்களா? முதலில் எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய முடியாது. 2 சதவீதம் ஏதாவது அதிசயம் நடந்தால் உண்டு.
முதலில் இந்த நீட்டுக்கு தற்கொலை செய்பவர்கள், ரம்மிக்கு தற்கொலை செய்பவர்கள் பற்றியெல்லாம் பேசுவதையே நிறுத்த வேண்டும். ஏன் மற்ற மாநிலங்களில் எல்லாம் நீட் இல்லையா.. அங்குள்ள மாணவர்கள் எல்லாம் தற்கொலையா பண்ணிட்டு இருக்காங்க? நீட் வந்து எத்தனை வருஷம் ஆச்சு.. நாலு வருஷமாக நீட் தேர்வு கட்டாயம்னு எல்லாத்துக்கும் தெரியுமா தெரியாதா? படிக்க வேண்டியதுதானே.. தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு நீட் தேர்வில் குறைவான மார்க் வழங்கப்படும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா.. அப்புறம் என்ன இவங்களுக்கு? அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு என்றும் சொல்லியாச்சா. இவ்வளவுதான் பண்ண முடியும்.
சரி, உங்க வழிக்கே வர்றேன். நாளைக்கே தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்றே வைத்துக் கொள்வோம். இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் கேஸ் போட்டாலே முடிஞ்சிருச்சு.. இந்த சட்டத்தை சில நொடிகளிலேயே உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிடும். அப்போ என்ன பண்ணுவீங்க? விலக்கு வாங்கிடலாம்.. விலக்கு வாங்கிடலாம்னு இன்னும் எத்தனை காலம்தான் இந்த பிள்ளைகளை அலைக்கழிக்க போறீங்க.. “நீட் வந்துருச்சு.. ஒழுங்கா படிங்கனு” சொல்றது சரியான அணுகுமுறையா? “இப்போ விலக்கு வந்துரும்.. அப்போ விலக்கு வந்துரும்னு இந்த விஷயத்தை இழுத்துட்டு போவது சரியான அணுகுமுறையா?
நீட்டை பற்றி எதுவுமே தெரியாம உதயநிதி கத்திட்டு இருக்காரு. வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுறாரு. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று உதயநிதி தானே சொன்னாரு. ஒரே கையெழுத்தை போட்டு ரத்து செய்ய வேண்டியதுதானே.. ஏன் இப்போ வரைக்கும் கத்திகிட்டே இருக்கீங்க. அன்றைக்கு ஓட்டு வாங்குவதற்காக என்னென்னவோ சொல்லிட்டு இப்போ புலம்புனா யாரோட தப்பு இது.. இந்த பொய் சொன்னதுக்காக நீட் தற்கொலைக்கு திமுகதான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது ஒரு துளியும் தப்பு கிடையாது அவங்க (மத்திய அரசு) என்றைக்காவது நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு உண்டு என சொன்னாங்களா? நீட்டை ரத்து செய்யவே முடியாதுனா தான் சொல்லிட்டு இருக்காங்க. நீங்கதானே (தமிழக அரசு) சொன்னீங்க.. நாங்க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செஞ்சுருவோம்னு. அப்போது நீங்கதானே இந்த தற்கொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.