டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைத்த தமிழக அரசின் ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு இரண்டு ஆண்டுகளுக்க பின்னர் கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில் தமிழக அரசின் பணிகளுக்கு ஊழிர்களை தேர்வு செய்து கொடுக்கும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பணிக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதேபோல் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகவும் பரிந்துரை செய்திருந்தது. அந்த கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்தது குறித்து அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்த கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். என்ன காரணத்திற்காக திருப்பி அனுப்பினார் என்பதற்கான காரணங்களும் வெளியாகி உள்ளது. அதில் நியமன அறிவிப்பினை எப்படி வெளியிட்டீர்கள் என்று ஆளுநர் கேட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளது. அப்படி வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தலைவரை நியமனம் தொடர்பாக செய்தித்தாள்களில் வெளிப்டையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் ஆளுநர் ரவி கேட்டுள்ளார். மேலும் பொதுவாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி உள்ளவர்கள் 62 வயதில் ஓய்வு பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க பரித்துரைக்கப்பட்டுள்ள சைலேந்திர பாபுவுக்கு 61 வயது பூர்த்தி ஆகிவிட்டது. எனவே இதில் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறியுள்ள ஆளுநர் ரவி, டிஎஸ்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர் தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பினார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் ஆளுநர் மற்றும் திமுக அரசு இடையே இருக்கும் நிலையில், இந்த புதிய விவகாரத்தால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.