சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?: முதல்வர் ஸ்டாலின்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? என்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம்! வாழிய வள்ளலார் சொன்ன ‘தருமமிகு சென்னை’!” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 384-வது சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில், சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” என்ற புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

சென்னை தினம் என்பது தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்புமிக்க நாளாகும். இந்நாள் 2004-ம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது. பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, சென்னை மாநகராட்சியாகும்.

சென்னை தினக் கொண்டாட்டத்தில் முதல்வர், சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” என்ற புகைப்படக் கண்காட்சியினைத் திறந்து வைத்துப் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களை பாராட்டி வாழ்த்தினார்.