நாகப்பட்டினத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இஸ்ரோ ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கை நழுவிப்போனதற்கு காரணம் அப்போதைய திமுக அமைச்சர்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்றய நாள்(23-8-23) மகத்தான நாள், முண்டாசுக் கவிஞர் பாரதியாரின் கனவு பலித்தது, இந்தியா நிலவில் தடம் பதித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் சில உதிரி பாகங்கள் கோவையில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த மகத்தான சாதனையை நியூயார்க் டைம்ஸ் பாராட்டியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார்.
சந்திரயான் 3 மூலம் பெறப்படும் தகவல்கள் உலக நாடுகளுக்கு பகிரப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். சந்திரயான் 3 திட்டம் ஒரு படத்தை விட குறைவான செலவில், 75 மில்லியன் ரூபாயில் முடிந்துள்ளது. எல்லோருடைய கடின உழைப்புதான் சந்திரயான் 3 வெற்றிக்கு காரணம். அடுத்தடுத்து நம் விஞ்ஞானிகளுக்கு சவால்கள் உள்ளன. இந்த சந்திரயான் 3 வெற்றிக்கு காரணம் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், அவருக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்திற்கும் இஸ்ரோவுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், இங்கு வரும்போது சொல்லுங்கள் வந்து சந்திக்கிறேன் என்கிறார். நாகப்பட்டினத்தில் அமைய இருந்த இஸ்ரோ ஏவுதளத்தை கோட்டைவிட்டதே திமுகதான். இஸ்ரோவின் ஏவுதளத்தை தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கதான் இந்திய அரசு முடிவு செய்திருந்தது.
சமநீதி, சமூகநீதி இதுதான் மோடியின் கொள்கைகள். ஆனால் திமுக அமைச்சரால் அந்த வாய்ப்பு பறிபோனது. இதுதொடர்பான கூட்டத்திற்கு அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த அண்ணாதுரையால் செல்லமுடியாமல் போதால் திமுக அமைச்சர் ஒருவர் 4 மணி நேரம் தாமதமாக தள்ளாடியபடியே சென்று பங்கேற்றார். இதனை பார்த்து மனம் வெதும்பி போன ராக்கெட் ஆய்வாளரான சதீஷ் தவான், இஸ்ரோ ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க ஒப்புதல் கொடுத்தார்.
இதனை சதீஷ் தவானுடன் இருந்த நம்பி நாராயணன் ரெடி டூ ஃபயர் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆதாரத்துடன் சொல்கிறேன், நாகப்பட்டினத்தை கோட்டைவிட்டது திமுகதான். இஸ்ரோ ஏவுதளத்தை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடுத்திருக்க கூடாது. தற்போது இஸ்ரோவின் இரண்டாவது லாஞ்சிங் பாயிண்ட்
குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ளது. இதையும் கோட்டை விட்டுவிடக்கூடாது” என்றார்.
பொன்முடி, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குகெல்லாம் வயதாகிவிட்டது. அவர்கள் ஏசி ரூமில் அமர்ந்து அரசியல் பேசுகின்றனர். தமிழக அரசியல் மாறிவிட்டது. இந்த நடைபயணத்தில் எனக்கு அதிக பரிசாக வந்தது பைபிளும் குரானும்தான். எத்தனை நாளைக்கு பாஜக இந்துக்கட்சி என்று பேசுவார்கள்? நீட் விவகாரத்தில் ஆளுநர் பிடிவாதமாக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நீட்டில் ஆளுநருக்கு எந்த ரோலும் இல்லை. ஆளுநரை பேசும் முறை சரியா? தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று ஆளுநரிடம் எப்படி பேசலாம்?
ஆளுநரை தேர்தலில் போட்டியிட அழைக்கிறார்கள். ஆளுநர் அதற்கு ஒப்புக்கொண்டு, என்னுடைய சொந்த ஊர் பீகார், அங்கு போட்டியிடலாம் வா என்று அழைத்தால் திமுகவினர் என்ன செய்வார்கள்? இந்தி தெரியாமல் பீகாரில் திமுகக்காரர்களால் என்ன செய்ய முடியும்? வாய் இருக்கு என்று பேசலாமா? வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினால் பாம்பு திரும்ப கொத்திவிடும்.
கைத்தட்டலுக்காக கண்டதையும் பேசுகிறார்கள். ஆளுநரை எதிர்ப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆளுநருக்கு கேள்வி கேட்க அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு பதில் கொடுக்க வேண்டியது தலைமை செயலாளர். ஆனால் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி பதில் கொடுக்கிறார். ஆளுநருக்கு பதில் கொடுக்க அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? இந்த அநியாயம் இந்தியாவில் எங்கும் நடக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
காவிரி விவகாரம் குறித்தும் கருத்து தெரிவித்த அண்ணாமலை, காவிரி பிரச்சனை இவ்வளவு தூரம் வர தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் காரணம் என்றார். கர்நாடக தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என வாக்குறுதி அளித்தது குறித்து தான் எச்சரித்தபோதே முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, அதனை நீக்கியிருந்தால், இப்போது இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது என்றும் அண்ணாமலை என தெரிவித்தார்.