தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேப்டன் என்று சினிமா ரசிகர்களாலும் தேமுதிக தொண்டர்களாலும் இன்றைக்கும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் அழகர்சாமி. இவரது பெயரை மாற்றியவர் தயாரிப்பாளர் எம்.ஏ.காஜா. 1979ல் இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் அந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அடுத்து அவர் ஹீரோவாக அறிமுகமான படம் ‘தூரத்து இடிமுழக்கம்’. கே.விஜயன் தயாரித்து இயக்கிய, மீனவர் வாழ்வை மையப்படுத்தியிருந்தது. சினிமாவில் வெற்றிகள் குறையாத நிலையிலும் 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை துணிந்து ஆரம்பித்து, எதிர்நீச்சல் போட்ட அவருக்கு அரசியலில் ஏறுமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே ஜெயித்து சட்டமன்றம் போனார். ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்தார்.
பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார். அதிமுக தேமுதிக கூட்டணி முறிந்தது. அரசியலில் நுழைந்து 10 ஆண்டுகளில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிலை படுத்தப்பட்டார் விஜயகாந்த். ஆனால் பலமில்லாத கூட்டணி அமைத்ததால் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது. அடுத்தடுத்த தோல்விகள் விஜயகாந்தை அசைத்து பார்த்து விட்டது. உடல்நலக்குறைவும் அவரை செயல்பட விடாமல் செய்து விட்டது. அறிக்கைகள் மூலம் மட்டுமே தற்போது அரசியல் செய்து வருகிறார் விஜயகாந்த். அவரது நட்பும் நல்ல உள்ளமும் பலராலும் மறக்க முடியாது. வெள்ளை மனசுக்காரர் விஜயகாந்த் உடல் நலமடைந்து பழைய பன்னீர் செல்வமாக வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
அதே போலவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்துக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். தே.மு.தி.க நிறுவனத் தலைவரும், எனது தோழருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.