கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் நேற்று கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொடநாடு வழக்கில் உங்களை தொடர்பு படுத்தி தனபால் என்பவர் நேற்று அளித்த பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘இது தவறான கேள்வி.. இதை டிவியில் கேட்பதே தவறு.. யாரோ ரோட்டில் போகிறவர் சொல்வதை வச்சி நீங்கள் கேட்கலமா.. இப்படிப்பட்ட கேள்வி கேட்பது தவறானது. யார் வேண்டும் என்றாலும் ரோட்டில் பேசுவார்கள்.. பேசுவது சரியா தவறா என்று பார்க்க வேண்டும். ஆட்சி இருக்கிற போது பல சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவத்தை சட்ட ரீதியாக அணுகி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டும் என்றே இன்றைய ஆட்சியாளர்கள் இதை திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்வது ஒரு போதும் நடக்காது. நான் பல முறை சொல்லிவிட்டேன். சொன்னவர் எப்படிப்பட்டவர். ஏற்கனவே பல வழக்கில் தொடர்பு உடையவர். இதே ஆட்சியாளர்கள் அவரை விசாரணைக்கு அழைத்துட்டு போய் 3 மாதம் சிறையில் அடைத்தார்கள். பேட்டி கொடுத்தவர் நில அபகரிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் இருக்கிறவர். கனகராஜ் ஜெயலலிதா டிரைவர் கிடையாது. சசிகலாவுக்கு தான் அவர் ஓட்டுநராக இருந்தார். தவறான தகவலை பத்திரிகையில் வெளிப்படுத்தி வருகிறீர்கள். இனி அப்படி வந்தால் நான் நிதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.