நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

34 ஆண்டுகளுக்கு முந்தைய சாலை விபத்து வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். பஞ்சாப் மாநில அமைச்சராகவும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பதவி வகித்தவர். அப்போது முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் போர்க்கொடி தூக்க வைத்தார் சித்து. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர்சிங், காங்கிரஸ் கட்சிக்கே முழுக்குப் போட்டார். அந்த தருணத்தில் தமக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கனவு கண்டார் சித்து. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதற்கும் நோ சொன்னது. பின்னர் சட்டசபை தேர்தலில் தம்மை முதல்வர் வேட்பாளர் என கனவில் மிதந்தார் சித்து. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட சித்து தோல்வியைத் தழுவினார். அத்துடன் பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதனால் சித்து வசம் இருந்த மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் 34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 1988-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் சித்து சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது தமது வாகனத்தில் மோதியவர்களுடன் சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் குர்னம்சிங் என்ற முதியவரை மிக மூர்க்கமாக சித்து தாக்கினார். இத்தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே குர்னம்சிங் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ்நீதிமன்றம், இவ்வழக்கில் இருந்து சித்துவை முதலில் விடுதலை செய்தது. ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றம் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.