கவர்னரை திரும்பப்பெற கோரும் போராட்டம் வெற்றி பெறும்: வைகோ

கவர்னரை திரும்பப்பெறக்கோரி நாங்கள் நடத்தி வரும் போராட்டம் வெற்றி பெறும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் நேற்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். அப்போது, மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்தினார். இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. மோகன் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரு அற்புதமான திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். சாதி, மதம், கட்சி என அனைத்தையும் கடந்து அத்தனை பிள்ளைகளுக்கும் உணவு வழங்க வேண்டும் என்று மனிதாபிமானத்தோடு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களும் இந்த திட்டத்தை பின்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நடைபெறவுள்ள ம.தி.மு.க. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வு கூடாது என்பது தான் எப்போதும் ம.தி.மு.க.வின் நிலைப்பாடு. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஏற்கனவே ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி 50 லட்சம் மனுக்களை ஜனாதிபதியிடம் வழங்கி உள்ளோம். இந்த விவகாரத்தில் கவர்னர் தமிழ்நாட்டிற்கும், தமிழக அரசுக்கும் கேடு செய்கிறார். கவர்னரை திரும்பப்பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கவர்னரை திரும்பப்பெறக்கோரி நடைபெற்று வரும் எங்களின் போராட்டம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.