மதுரை சுற்றுலா ரெயிலில் தீ விபத்து: 9 பேர் பலி!

மதுரையில் விரைவு ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்தாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோ ஆய்வு செய்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 90க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சுற்றுலா ரயில் ஒன்று தென் மாநிலத்தில் இருக்கும் புனித தலங்களுக்கு வந்திருக்கிறது. இந்த ரயில் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு மதுரை அருகே நின்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை சுமார் 4 மணியளவில் ரயிலில் இருந்த சிலர் டீ குடிப்பதற்கான சிலிண்டரை பற்ற வைத்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. நின்றுக்கொண்டிருந்த பெட்டியில் தீ எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் ரயில்வே ஊழியர் தீ பற்றிய ரயில் பெட்டிகளை மட்டும் தனியாக பிரித்துவிட்டு தீயை அணைக்க போராடியுள்ளனர். நீண்ட நேரடி போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டிருக்கிறது. இதில் முதல் கட்டமாக 2 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதுவரை மொத்தம் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தவிர 4 பேர் மூச்சுத்தினறல் காரணமாக ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதேபோல அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிண்டரில் சமைக்க முயன்றதால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்களின் கூற்றை உறுதி செய்யும் விதமாக தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியிலிருந்து கேஸ் சிலிண்டர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புனித தலங்களுக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.