அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போன விவகாரத்தில் ஜெயக்குமாரை சம்பந்தப்படுத்தி அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக உதயநிதியை ஜெயக்குமார் மிகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மதுரையில் அதிமுக மாநில மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் மனைவி காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, இதுதொடர்பாக உதயநிதி நேற்று மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகி ஒருவரின் மனைவி காணவில்லையாம். சும்மா மேடைக்காக பேசுறேன்னு நினைக்க வேண்டாம். உண்மையிலேயே காணவில்லை. இப்போ போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க. முதலில் ஜெயக்குமாரை தான் விசாரிக்க போறாங்களாம்” எனக் கூறினார்.
உதயநிதி கிண்டலாக பேசிய பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. “ஒரு பொது இடத்தில் ஒரு எதிர்க்கட்சி மூத்த தலைவரை இப்படியா நாகரீகம் இன்றி விமர்சிப்பது?” என அதிமுகவினர் காட்டமாக கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜெயக்குமாரிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “உதயநிதி ரொம்ப தரம் தாழ்ந்து பேசிருக்காரு. உதயநிதிக்கு கொஞ்சம் கூட அரசியல் பக்குவம் இல்லை. வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்காரு. உதயநிதி நாக்கை அடக்கி பேசணும். இதோட நிறுத்திட்டா உங்களுக்கு நல்லது. இல்லைனா, உங்க அப்பாவோட விஷயங்கள் எல்லாம் வெளியே வந்துரும். நாறடிச்சிடுவோம். முதலில் உங்க முதுகை திரும்பி பார்த்துக்கோங்க. பெரிய யோக்கியம் மாதிரி பேசக்கூடாது. அரசியல் ரீதியாக பேச துப்பு இல்லைனா பேசாதீங்க. இது தொடர்ந்தால் பதிலுக்கு பதில் டபுள் மடங்கா நாங்க திருப்பிக் கொடுப்போம்” என்றார்.