உதயநிதி அரசியலுக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, அவருக்கு என்ன அரசியல் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊழல் நடைபெறும் நகராட்சி, பேரூராட்சிகளை கண்டித்து அந்த அலுவலகங்கள் முன்னர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
கேள்வி:- இவ்வுளவு பெரிய மாநாட்டை ஓபிஎஸ் விமர்சிக்கிறாரே?
பதில்:- விரக்தியின் விளிம்பில் பேசுகிறார்; இவ்வுளவு பெரிய மாநாடு என்று நீங்களே ஒத்துக் கொண்டீர்கள் உங்களுக்கு இருக்கும் மனம் கூட அவருக்கு இல்லை.
கேள்வி:- அதிமுக மாநாட்டை உதயநிதி கூட விமர்சித்து உள்ளாரே?
பதில்:- அவர் மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தால் எப்படி சிறப்பாக மாநாடு நடந்து என்று தெரியும். பட்டிமன்றம், கருத்தரங்கம் அழகாக நடைபெற்றது. அதை பொறுக்க முடியாததால்தான் அவர் இப்படி கருத்தை சொல்லி இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து 6 மாதம்தான் ஆகிறது, அவருக்கு என்ன அரசியல் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. நான் 45 ஆண்டுகாலம் அரசியிலில் இந்த கட்சியில் பணியாற்றி உள்ளோம்.
கேள்வி:- மத்திய அரசியில் சிஏஜி அறிக்கை ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றார்களே?
பதில்:- சிஏஜி அறிக்கை ஊழல் நடந்து உள்ளது என்று சொல்லவில்லை. தணிக்கை குழு என்பது அவர்களின் கணக்குப்படி சொல்வார்கள். இது எல்லா ஆட்சி காலத்திலும் உள்ளதுதான்.
கேள்வி:- முதலமைச்சர் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி உள்ளாரே?
பதில்:- காவிரி நதிநீர் பிரச்னைக்கு முதலமைச்சரால் தீர்வு காணமுடியவில்லை. குறுவை சாகுபடி அரசை நம்பி செய்துவிட்டார்கள். தண்ணீரை சரியான நேரத்தில் திறந்தால் மட்டும் போதாது முறையாக தண்ணீரை விநியோகிக்க வேண்டும். டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் சொல்லி உள்ளார். அந்த டெல்டாக்காரன் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
கர்நாடகாவில் இந்த மாதத்துடன் மழை சீசன் முடிந்தால் மழை பொழிவு குறையும். இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளார்கள்.
கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டதாக முதல்வர் கூறி உள்ளாரே? அதிமுக எப்போது பரப்புரையை தொடங்கும்?
பதில்:- அதிமுகவை பொறுத்தவரை முதற்கட்டமாக பூத் கமிட்டி, பாசறை, மகளிர் குழு அமைக்கும் பணிகளை செய்து வருகிறோம். அஸ்திவாரம் போட்டால்தான் கட்டடம் வலுவாக இருக்கும். இந்த பணிகள் நிறைவு பெற்ற உடன் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும்.
கேள்வி:- கொடநாடு கொலை வழக்கு தொடர்பாகவும் ஓட்டுநர் கனகராஜ் தொடர்பாகவும் ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளாரே?
பதில்:- அம்மா அவர்களுக்கு ஒருநாளாவது கனகராஜ் ஒட்டுநராக இருந்துள்ளாரா? அப்படி ஏதும் நடக்கவில்லை. விரக்தியின் விளிம்புக்கு சென்றுவிட்டதால் ஓபிஎஸ் பேசி வருகிறார். நல்லத்தீர்ப்பு எங்கள் பக்கம் வந்ததால் அவர் திமுகவிற்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கிறார். விலைவாசி உயர்வு என்பது ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கிறது. மளிகை சாமன்கள் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. ஆனால் இந்த விடியா திமுக ஆட்சி செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.