இலங்கை செல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை செல்ல இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இலங்கையை எப்போதும் தமது பிடியில் இந்தியா வைத்திருந்து ஒரு காலம். ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமரான பின்னர் அத்தனையும் தலைகீழாகிப் போனது. இந்திய வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் இடத்தில் அதிகாரிகள் தங்களை நிலை நிறுத்தியதால் இலங்கையை இந்தியா தனது பிடியில் இருந்து நழுவ விட்டது. இதனால் இலங்கையில் எளிதாக சீனா உள்ளே நுழைந்து இந்தியாவுக்கு இன்று பேராபத்தாக நிற்கிறது. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மிகப் பிரம்மாண்ட கடற்படை தளம் ஒன்றை சீனா அமைக்கப் போவதாக அண்மையில் அமெரிக்கா ஆய்வு நிறுவனம் எச்சரித்திருந்தது. இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகம் அமையப் போகிறது என்பதும் அதன் எச்சரிக்கைகளில் ஒன்று. என்னதான் இலங்கைக்கு பெருமளவு நிதி உதவி மத்திய அரசு வழங்கினாலும் இலங்கை அரசாங்கமானது சீனாவுக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்தே வருகிறது. இது மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுடன் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இலங்கை அரசு அதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை என்பதும் மற்றொரு அதிருப்தி

இந்தப் பின்னணியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா- இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அதேபோல இந்தியா- இலங்கை இடையேயான பாலம் அமைப்பது குறித்தும் விவாதிக்க இருக்கிறார். இலங்கை தமிழர்களின் தாயகப் பகுதியான திருகோணமலை மேம்பாட்டுக்காக அண்மையில் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணத்தின் போது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நிலைமையையும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய இருக்கிறார்.

மேலும் இலங்கை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இலங்கையின் முப்படை தளபதிகளையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.