அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதியை தங்கள் நாட்டின் ஒருபகுதியாக இணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அது தன்னாட்சி பிராந்தியமாக திபெத்தின் ஒரு பகுதி என கூறி வருகிறது. மேலும், லடாக்கை ஒட்டிய அக்சாய் சின் பகுதியை சீனா முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில், சீனாவின் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தையொட்டி, அந்நாட்டின் இயற்கை வள அமைச்சகம் புதிய அதிகாரப்பூர்வ வரைபடம் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியவை சீனாவின் பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், தைவான் நாட்டையும், தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய சில பகுதிகளையும் சீனா தனது புதிய வரைபடத்தில் சொந்தம் கொண்டாடி உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டி பிரச்னையை கிளப்பியது. தற்போது ஒட்டுமொத்த அருணாச்சலத்திற்கும் சொந்தம் கொண்டாடி உள்ளது. டு இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டரில், ‘‘சீனா இவ்வாறு முயற்சிப்பது ஒன்றும் முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் இதை நாங்கள் நிராகரித்துள்ளோம். அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பெயர் மாற்றுவது போன்ற முயற்சிகள் மூலம் உண்மையை மாற்ற முடியாது’’ என்றார்.
இதற்கிடையே, அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டி உள்ள கிழக்கு கமெங்க் மாவட்டத்தின் சயாங் தஜோ பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில ஆளுநர் கே.டி.பர்நாயக், ‘‘நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்பு படைக்கு மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. ‘தேசமே முதலில்’ என்ற உணர்வுடன் எல்லையை பாதுகாப்பதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தனது டுவிட்டரில், ‘‘அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள். இதை சீனாவின் தன்னிச்சையான எந்த வரைபடமும் மாற்ற முடியாது. பிற நாடுகளின் பகுதிகளை வரைபடம் மூலம் சொந்தம் கொண்டுவதில் சீனா எப்போதும் பழைய குற்றவாளியாக இருந்து வருகிறது.
இதுபோன்ற சட்ட விரோத செயல்கள், பெயர்களை மாற்றுவதை எப்போதும் காங்கிரஸ் எதிர்க்கிறது. இந்திய எல்லைக்குள் சீனாவின் அத்துமீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த டெல்லியில் நடக்க உள்ள ஜி20 உச்சி மாநாட்டை ஒன்றிய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறோம். மேலும், அசல் எல்லைக் கோட்டில் (எல்ஏசி) சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள 2000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும் மீட்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.