சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அவர் பெரிதும் நம்பிய இப்போதைய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த The Hunt for Veerappan எனும் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 4 பாகங்களைக் கொண்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடரானது பல்வேறு அரசல் புரசலான தகவல்களின் உண்மைதன்மையை வெளிப்படுத்தி வந்துள்ளது. இத்தொடரில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, திவிக தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டோரின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரம் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது.
இதனடிப்படையில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
என் கணவர் முழு நம்பிக்கை வைத்திருந்த நபர்கள் மூலமாக போலீசார் இலங்கையைச் சேர்ந்தவர்களைப் போல் நடித்து, அவரை காட்டில் இருந்து வெளியே வர வைத்து, சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொலை செய்திருக்கலாம். அது கொளத்தூர் மணி அண்ணனாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில், என்னிடம் பேசியபோது, அவர் கொளத்தூர் மணி அண்ணன் மூலமாக இலங்கை சென்றுவிடலாம் எனக் கூறியிருந்தார். என் கணவர் மணி அண்ணாவைத்தான் முழுமையாக நம்பியிருந்தார். அதனால், ஒருவேளை மணி அண்ணாவை வைத்து போலீசார், இதை அரங்கேற்றி இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், இப்போது அதை உறுதிப்படுத்த முடியவில்லை. என் கணவர் அப்படி யாரையும் எளிதில் நம்பிவிடமாட்டார். அதேபோல, அவரை என் கணவர் அழைத்ததாகவும், அவர் சென்று பார்க்க முடியாமல், வேறு ஒருவரை அனுப்பியதாகவும் அந்த நேரத்தில் மணி அண்ணாவே என்னிடம் கூறியிருந்தார். இவ்வாறு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறியதாக பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கொளத்தூர் மணியின் விளக்கத்தையும் பிபிசி தமிழ் வெளியிட்டுள்ளது. கொளத்தூர் மணி தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுள்ளதாவது:-
என்ன நடந்திருக்கும் என சிந்திப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் கற்பனைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதில் உண்மை இல்லை. வீரப்பன் இறந்த அன்று இரவு காவல்துறையினர் என் வீட்டிற்கு வந்து தகவல் சொன்னபோதுதான் எனக்கு நடந்ததே தெரியும். அன்று வீரப்பன் இறுதிச்சடங்கு, இறுதி ஊர்வலம் வரை அவரது உரிமைக்காக காவல்துறையிடம் சண்டையிட்டது நான்தான். இவ்வாறு கொளத்தூர் மணி கூறியதாகவும் பிபிசி தமிழ் வெளியிட்டுள்ளது.