பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா?: எடப்பாடி பழனிசாமி

1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்ததை மறந்துவிட்டீர்களா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடந்த நிலையில் அது எழுச்சி மாநாடாக மாறியதால் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலையங்குளத்தில் உள்ள கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக மொட்டை அடித்துக் கொண்டு கறி விருந்து படைத்தார். அந்த வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் சென்னைக்கு செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரள குற்றவாளிகளுக்கு திமுககாரர்தான் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளார். கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் வழக்கு விசாரணை தாமதமானது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், புதிய ஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. 290 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 90 சதவீத விசாரணை முடிந்தது. சட்ட போராட்டம் நடத்தி 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பிரச்சினையில் அதிமுக சாதக தீர்ப்பை பெற்றது. அதை அமல்படுத்த தங்களது “இந்தியா” வில் உள்ள காங்கிரஸ் ஆளும் கர்நாடகா நீர்பாசனத் துறை அமைச்சர் டி சிவக்குமாரை பெங்களூரில் சந்தித்த போது வலியுறுத்தாதது ஏன்?

தமிழக பிரச்சினையையே இந்தியா கூட்டணி அமைத்தால் சரி செய்ய முடியாத முதல்வர் ஸ்டாலின், இந்திய அளவில் பிரச்சினைகளை சரி செய்ய போவதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. காவிரி நதி நீர்ப்பிரச்சினைக்காக எங்களது எம்பிக்களால் 22 நாட்கள் நாடாளுமன்றமே முடங்கி போனது. காவிரி டெல்டா விவசாயிகள் துயர் துடைக்காத அரசாக திமுக விளங்குகிறது. அதிமுக மிகப் பெரிய கட்சி. 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? அதனுடன் நீங்கள் 1999 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து உடல்நிலை சரியில்லாத போது இலாக்கா இல்லாத அமைச்சராக உங்கள் முரசொலி மாறன் நீடித்தாரே. கட்சிக் கொள்கை வேறு, தேர்தல் கூட்டணி வேறு. அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் கூட்டணி அமைப்பதுதான் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.

மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் 27 மாதங்களாகியும் தராமல் இழுத்தடித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மின் கட்டணம் உயர்ந்துவிட்டது. பதிவு கட்டணமும் உயர்ந்துவிட்டது. முதல்வருக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை. தனது குடும்ப வளர்ச்சியிலேயே அக்கறை செலுத்துகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அப்போது அவரிடம், கொடநாடு என்றாலே, எடப்பாடி பழனிசாமிக்கு குலை நடுக்கம் ஏற்படுவதாக முரசொலி நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதுதொடர்பாக நான் சட்டமன்றத்தில் கேட்டேன். முதல்வர் அப்போதே கூறியிருக்காலமே? இதுதொடர்பாக பல கேள்விகளை நான் சட்டமன்றத்தில் எழுப்பினேன். அப்போது ஏன் வாயை மூடிக் கொண்டிருந்தனர். ஒரு முதல்வர், ஆட்சியில் இருக்கும்போது பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன. இன்றைய ஆட்சியில் எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன? திமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேர் இறந்தனர்? அதையெல்லாம் நாங்கள் திருப்பி பார்க்க மாட்டோமா? நாங்கள் மறுபடியும் திரும்ப விசாரிக்க மாட்டோமா?அதிமுக ஆட்சியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இதை மட்டும் ஏன் திமுகவினர் மையமாக வைத்துக் கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கெனவே, அவதூறு செய்தி பரப்பிய ஒருவர் மீது நான் தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நான் அடிக்கடி ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதுகுறித்து சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். ஆனால், ஏன் அந்த நாளேட்டில் அதுகுறித்து எல்லாம் குறிப்பிடவில்லை.

கொடநாடு சம்பவம் நடந்து முடிந்தவுடன், குற்றவாளிகளைக் கண்டுபிடித்தது, குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சியில்தான் இந்த வழக்கு நடைபெற்றது. வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது, அந்த குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டது திமுக வழக்கறிஞர்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே குற்றவாளிக்கு ஆதரவாக வாதிட்டுள்ளார். இதையெல்லாம் அந்த நாளேட்டில் குறிப்பிடவில்லை. இந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். எனவே இதெல்லாம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது? தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசுக்கு சந்தேகம் இருப்பதால், சிபிஐ வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும்” என்று கூறினார்.