தூக்கு தண்டனையில் ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் போக முடியாது!

தூக்கு தண்டனை தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவை எதிர்த்து இனி யாரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது, குடியரசுத் தலைவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; குடியரசுத் தலைவரின் முடிவு குறித்து வினா எழுப்பக் கூடாது; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்த முன்வரைவின் 473-ஆம் பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. குற்றவழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பது குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்கள் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-ஆம் பிரிவின்படி, ஒருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதனிடையே கருணை மனுக்களை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

இந்நிலையில் கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானது என்ற நிலை ஏற்பட போகிறது. தற்போதைய நிலையில் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் குடியரசுத் தலைவர்களால் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அதை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்கள். அதை பரிசீலிக்கும் உச்சநீதிமன்றம், தண்டிக்கப்பட்ட மனிதர்களின் தண்டனையை குறைத்தோ, ரத்து செய்யவே செய்கின்றன. அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்த பிறகும், உச்சநீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்து தண்டனை குறைப்பை பெற்றார்கள். சிலர் விடுதலையும் ஆனார்கள். இப்படி தூக்குமேடைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் காப்பாற்றப்பட்டனர். தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது என புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு. தற்போதைய நிலையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் தான் இருக்கிறது.

இந்நிலையில் Bharatiya Nagarik Suraksha Sanhita Bill என்ற பெயரில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்து அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், இனிமேல் குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது.