லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும். மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது போல் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இப்போது இளைஞரணி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுத தொடங்கி உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
5 நாட்களில் 16 கழக மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் என்கிறார்கள். நான் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றேன் என்பதை விடக் குறுகிய கால இடைவெளியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாவட்ட வாரியாக அணி திரட்டும் வல்லமை பெற்றது இந்தக் கழகம் என்பது தான் நமக்கான பெருமை. சேலத்தில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டுக்கு இளைஞர்களைத் தயார்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடத்தலாம் எனத் திட்டமிட்டோம். முதல் கூட்டத்தைக் கடந்த 19-ந் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடத்தினோம். அங்கு கூடிய இளைஞர்களின் எழுச்சி தான் அனைத்து மாவட்டங்களிலும் ‘செயல்வீரர்கள்’ கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை எங்களுக்குத் தந்தது.
திருமணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக 25-ந் தேதி வருவதாக ஒப்புக்கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தே அடுத்தடுத்த செயல்வீரர் கூட்டங்களை நடத்துவோம் என முடிவு செய்து மாவட்டக் கழகச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஆய்வுக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கினோம். 20-ந்தேதிதான் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களைக் கூட்டி மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தியுள்ளோம். மீண்டும் செயல்வீரர்கள் கூட்டம் என்றால், இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ள வருவார்களா? என்ற சந்தேகம் எங்களுக்குள் இருந்தது. ஆனால், அந்தச் சந்தேகங்களை எல்லாம் பொய்யாக்கும் விதமாக அமைந்திருந்தது தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம். திலகர் திடல் என்பது பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் உள்பட பலர் கூட்டம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். அந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலாக நான் கலந்துகொள்வதும், அது இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டமாக அமைந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. திடல் முழுவதும் இளைஞர்களின் தலைகளாகக் காட்சியளிக்கும் வகையில் கட்டுக்கடங்கா கூட்டம். ‘2024 பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையில், சேலம் மாநாடு அமைந்திட வேண்டும்’ என்று உரையாற்றினேன்.
தஞ்சாவூர் செயல்வீரர் கூட்டத்தை முடித்துக் கொண்டு திருவாரூர் கூட்டம். முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி நம் கழகத் தலைவர் திறந்துவைத்த ‘கலைஞர் கோட்டம்’ அருகே கூட்டம் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இடமில்லாமல் சுற்றிலும் இளைஞர்கள் கூடி நின்றனர். நாம் பேச பேச அவர்களிடம் அவ்வளவு ஆரவாரம். ‘இவர்களில் பல இளைஞர்களை நாங்கள் கழகக் கூட்டங்களில் பார்த்ததில்லை. நீங்க வர்றீங்கனு ஆர்வத்தோட வந்திருக்காங்க’ என்றனர் நம் நிர்வாகிகள். கழகத் தலைவரின் தலைமையிலான அரசுக்கும், மாணவர்களை-இளைஞர்களை மையமாக வைத்து, அது செயல்படுத்தும் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பே இந்தக் கூட்டம் என்பதை உணர முடிந்தது. 26-ந்தேதி நாகை, மயிலாடுதுறை கூட்டங்கள், 27-ந்தேதி பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, திருச்சி கூட்டங்கள், 28-ந்தேதி அன்பில் பொய்யாமொழி மாமா நினைவு நாள் கூட்டம், பின்னர் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஆய்வு கூட்டங்கள், அங்கிருந்து கடலூர் கூட்டம். இவை அனைத்தும் என்னை உற்சாகம் கொள்ள வைத்தது. வெவ்வேறு பின்னணியில் இருந்து அங்கு கூடியுள்ள அந்த இளைஞர்கள் அனைவரும் கழகம், கழகத் தலைவர் என்ற ஒற்றை நம்பிக்கையில் கூடியுள்ளதை எவரும் புரிந்துக்கொள்ள முடியும். நம் மீது இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும், இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும் நம் கழகப் பணியை, மக்கள் பணியை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தளராமல் உழைக்க வேண்டும் என்ற உறுதி எனக்குள் ஏற்பட்டது.
நான் செல்லும் இடங்களில் பட்டாசு வெடிப்பதையும், பொன்னாடை, பூங்கொத்து கொடுப்பதையும் தவிர்க்குமாறு பலமுறை அறிவுறுத்தியிருக்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அதற்கு பதிலாக புத்தகங்கள், கழக வேட்டி-துண்டுகள் போன்றவற்றை தாருங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் மாநில மாநாட்டுக்கு, இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதியாகவும் தரலாம். லட்சக்கணக்கான கழக இளைஞர்களை ஒருங்கிணைக்கக்கூடிய நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொள்ள வேண்டும், மக்களின் தேவை குறித்து இன்னும் கற்க வேண்டும், அவர்களுக்குப் பயன்படும் படி இன்னும் செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் ஏற்படுகிறது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.