அரசியலை விட்டுவிட்டால் தாம் விவசாயம் பார்க்கப் போய்விடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் நெடுங்குன்றம் ரவுடி சூர்யா, பாஜகவில் இணைந்து கட்சியின் பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி பெற்றது தமக்கு தெரியாது எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை அன்னூரில் இன்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
நெடுங்குன்றம் ரவுடி சூர்யா, பாஜகவில் இணைந்தது தெரியாது. கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள் பாஜகவில் இணைந்து திருந்தி வாழ நினைக்கலாம். அவர்களுக்கு பாஜக ஒரு வாய்ப்பு கொடுத்ததாக இதை பார்க்கிறேன். ஒரு நல்ல பாரதத்தை படைக்க பாஜகவை சூர்யா பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் பாஜகவின் பெயரை வைத்துக் கொண்டு தவறு செய்தால் அவர்களை அனுமதிக்க முடியாது.
மக்கள் இப்படித்தான் அரசியல் வேண்டும் என்று சொன்னால் அரசியல்வாதிகள் அவர்களை மாற்றிக் கொள்வார்கள் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இந்த மாதிரியான அரசியல்வாதியைத்தான் நான் ஆதரிப்பேன் என்று மக்கள் சொல்லிவிட்டால் அனைத்து அரசியல்வாதிகளும் மாறுவார்கள்.
டெல்லி தலைமையிடம் கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் பேசுவேன். ஒரு கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்தால் அது எங்கே போய் முடியும் என்பது தெரியாது. அரசியலை விட்டுவிட்டால் நான் தோட்ட வேலைக்கு, விவசாயம் பார்க்க சென்றுவிடுவேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
முன்னதாக பிரதமர் மோடியின் முன்னெடுப்பான, தூய்மையே சேவை – மூலம், கோவை அக்ரஹார சாமக்குளத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. கடந்த நான்கு வருடங்களாக இந்த ஏரியில் புனரமைப்பு பணிகளைச் செய்து வரும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்புக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் அண்ணாமலை.