எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட முடியாது என்று கி.வீரமணி கூறினார்.
சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில், அயனாவரம் நம்மாழ்வார்பேட்டையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் ஏற்பாட்டில், “உடன்பிறப்பின் உயிர்துடிப்பு கலைஞர்” என்ற தலைப்பில் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
நான் கட்டும் வேட்டியும் அமைச்சர் கட்டியுள்ள வேட்டியும் வெவ்வேறானது. ஆனால் இரண்டும் சேர்ந்து இருக்க வேண்டும். அதுவும் சாயம்போகாத காவி வேட்டியை அணிந்துள்ளவர் அமைச்சர் சேகர்பாபு. திமுக வாரிசு கட்சி அல்ல, கொள்கை வாரிசு கட்சியாகும். எதிரிகளால் அசைக்க முடியாத காரணம் இதுபோன்ற கொள்கை வாரிசுதான். எந்த காலத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கக் கூடாது என்பது சனாதானம். 1929ம் ஆண்டிலேயே சொத்து உரிமை, கல்வி உரிமைக்காக தீர்மானம் போட்டார் பெரியார். அதையேற்று தான் 1989ம் ஆண்டில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று பெண்களுக்கு சம உரிமை கொடுத்தவர் கலைஞர். அதன் தொடர்ச்சி தான் இன்று ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வருகிறது. இந்தியாவிலேயே எங்குமே இந்த திட்டம் கிடையாது.
எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட முடியாது. கல்லூரிக்கு சென்ற பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் புதுமைபெண் திட்டம். இந்த திட்டத்தையெல்லாம் பார்த்து எதிரிகளுக்கு வயிறு எரிகிறது. சனாதானம் குறித்து பேசுகிறார். அந்த மாநாட்டுக்கு எப்படி போகலாம் என்கின்றனர். எங்கே, யார் போவது என்பது அவரது கருத்துரிமையாகும். அனைவருக்கும் படிப்பு கொடுப்பது திராவிட மாடல் ஆட்சி. ஆனால் குஜராத் மாடல் குல கல்வியை கொடுக்கிறது. விஸ்வகர்மா திட்டம் மூலம் தந்தை தொழிலை செய்ய சொல்கிறது. மாடு மேய்த்தவன் மகன் இன்று ஐஏஎஸ் ஆகிறான். இதனை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை தடுக்க தான் நீட் தேர்வு. மத்திய பிரதேச தேர்தலில் பாஜக வராது, காங்கிரஸ் கட்சி தான் வரும் என்ற செய்தி வந்துள்ளது. தென் மாநிலங்களில் பாஜக கிடையவே கிடையாது. மக்களுக்கு தேவை சமத்துவம் தான். இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் கனிமொழி என்.வி.என்.சோமு, கலாநிதி வீராசாமி, சென்னை மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.