சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தும் சந்திரபாபு நாயுடு!

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கிறார்.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி கைது செய்தனர். தற்போது இவர் ராஜமுந்திரி சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். இவருக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. ஆந்திராவை பொறுத்த அளவில், தற்போது முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கும், தெலுங்குதேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார். ஏற்கெனவே தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி நீதிமன்றத்தை நாடி அவருக்கு இரண்டு முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து காந்தி ஜெயந்தியான இன்று ஜெகன் மோகன் ரெட்டியின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக அவர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். அவர் மட்டுமல்லாது, அவரது மனைவி, மகன் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றனர். மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. எனவே ஆந்திராவில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் கே.அச்சன்நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “75 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிடியில் இருந்து இந்தியாவிற்கு விடுதலையை பெற்று கொடுத்துவிட்டார். தேசத்தின் மக்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய ஜனநாயக கட்டமைப்பில் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசு அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையிலும், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அமைதியான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலும் நடந்து கொள்கிறது. எனவே, அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.