திருநங்கைகளுக்கு உரிமை தொகையை விரைவில் முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கீதாஜீவன்!

திருநங்கைகளுக்கும் உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்று சமூகநலத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கு நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது என்று பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

போக்சோ சட்டத்தை தமிழக அரசு கடுமையாக அமல்படுத்தி வருகிறது. விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படுகிறது. இதை முதல்வரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காதல் வயப்படும் சந்தர்ப்பங்களில் போக்சோ சட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது. எனினும், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் அக்.18-ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம். முதல்வர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இதுவரை 90,000 பேருக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.