அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தமிழ்நாடு அரசு தனியார் மயமாக்க துடிப்பதாக கூற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:-
உணவு, உடை, இருப்பிடம் அதற்குப் பிறகு நான்காவதாக பயணம் என்பது அனைத்து மக்களின் வாழ்விலும் இன்றியமையாததாகும். தமிழகம் முழுவதும் தினசரி தங்களது வேலைக்காக செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்கி வரும் போக்குவரத்துக் கழகங்கள் ஒரு சேவைத் துறை என்ற கொள்கை முடிவோடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், குறைந்த கட்டணத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்களின் பெருமளவு இழப்பை, அரசு நிதி கொண்டு ஈடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, தங்களது 30 ஆண்டு கால ஆட்சியிலும் உறுதி செய்தது. மேலும், தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய பேருந்துகள் எங்களது ஆட்சியில் வாங்கப்பட்டன. ஆனால், தற்போது நடைபெற்று வரும் விடியா தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 28 மாதங்கள் ஆன நிலையிலும் இதுவரை ஒரு புதிய பேருந்தைக்கூட வாங்கவில்லை.
குறிப்பாக, எங்கள் ஆட்சியின் இறுதியில் அதாவது பிப்ரவரி 2021-ல், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 3,324. விடியா திமுக ஆட்சியில் 30.9.2023 அன்றைய நிலவரப்படி இயக்கப்படும் பேருந்துகள் சுமார் 2,600 மட்டுமே. குறைந்த அளவு பேருந்துகளே இயங்கும் நிலையில் உள்ளதால், பல பேருந்து சேவைகளை நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு நிறுத்தியுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளையே இயக்குவதால் நகரப் பகுதிகளில் மகளிர் தங்களது தினசரி வேலைக்குச் செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே துவங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதன்மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கெனவே, கடந்த ஜூலை மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் ஊழியர்களை அமர்த்த முயற்சித்த விடியா திமுக அரசை எதிர்த்து அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஆர்ப்பாட்டம் செய்தன. நானும், இந்த விடியா திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நேரடியாகத் தொழிலாளர்களை நியமிக்க வலியுறுத்தினேன். ஆனால், தொழிலாளர் துரோக விடியா திமுக அரசு, அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில், திமுக-வின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி மவுனம் காக்கின்றன. ஏற்கெனவே, கடந்த ஜூலையில் 538 தொழிலாளர்களை ஒப்பந்த அடைப்படையில் நியமித்துவிட்டோம். எனவே, தைரியமாக இனி அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கலாம் என்று இரண்டாம் கட்டமாக 30.9.2023 அன்று 117 ஓட்டுநர்களையும், 117 நடத்துனர்களையும் தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது இந்தத் தொழிலாளர் விரோத விடியா திமுக அரசு. இதன்படி, போக்குவரத்துத் துறைக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால் எதற்கெடுத்தாலும் சமூக நீதி, சமூக நீதி என்று பொய் முகமூடி அணிந்து நடமாடும் திரு. ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் – அரசு போக்குவரத்துத் துறையில் இனி Rule of Reservation-ஐ கடைபிடிக்க முடியாது. போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது. போக்குவரத்துத் துறையில் 8 மணி நேர வேலை கடைபிடிக்க முடியாது. தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது. இனி தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியும், வருடாந்திர ஊதிய உயர்வும் கிடைக்கா நிலை ஏற்படும். அரசு போக்குவரத்துத் துறையில் இனி தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் என்பதே பெயரளவில் மட்டுமே இருக்கும். தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பல பலன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.
ஏற்கெனவே, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, இருமுறை மின் கட்டண உயர்வு, பலமுறை பால் பொருட்கள் விலை உயர்வு, அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று, தமிழக மக்கள் கடின வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இத்துடன், தற்போது தண்ணீருக்காகப் போராடும் விவசாயிகள்; மின் கட்டணத்தைக் குறைக்கப் போராடும் சிறு, குறு தொழில் முனைவோர்கள்; உரிமைக்காகவும், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் போராடும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் என்று தமிழகத்தில் தினமும் போராட்டங்கள் நடைபெறுவதை பத்திரிக்கைகளும், ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. மக்களின் போராட்டங்களை எல்லாம் இனியும் திராவிடம் என்றும், சனாதனம் என்றும், சமூக நீதி என்றும் பேசி, தமிழக மக்களை மடைமாற்றம் செய்துவிடலாம் என்று பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினோ; விடியா திமுக அரசோ நினைத்தால், இனி அது தமிழகத்தில் எடுபடாது. ஏனெனில், இன்று தமிழக மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர். தீய சக்தி திமுக-வின் பசப்பு வார்த்தைகளில் தமிழக மக்கள் இனியும் மயங்க மாட்டார்கள்.
எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கத் துடிக்கும் விடியா திமுக அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்றும்; பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றும்; போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து, 18.9.2023 அன்று வரை ஆன் லைன் மூலம் பதிவு செய்துள்ள சுமார் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.