‘காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் தர மறுத்தபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மையின் கருத்துக்கு எதிராக அண்ணாமலை ஏன் எதுவும் பேசவில்லை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காவிரி விவகாரத்தில் பாஜகவினர்தான் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். கர்நாடக மக்கள் பிரச்சினையை உருவாக்கவில்லை. அங்குள்ள மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சினையை உருவாக்கவில்லை. அரசியல் காரணமாக அங்கிருக்கும் பாஜகதான் இதை செய்கிறது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காவிரியில் தண்ணீர் திறக்க அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தபோது, தமிழக காங்கிரஸ் சார்பில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். தமிழக அரசின் பக்கம் நாங்கள் நின்றோம். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். சிவக்குமாரின் கருத்துக்கு மாறான கருத்தை தெரிவித்தோம். அண்ணாமலை ஏன் எடியூரப்பாவின் கருத்துக்கும், பசவராஜ் பொம்மையின் கருத்துத்துக்கும் எதிராக எதுவும் சொல்லவில்லை. அது பாஜகவின் கடமை இல்லையா? கர்நாடகத்தைப் பொறுத்தவரை, தண்ணீர் பிரச்சினை என்பது, கர்நாடக அரசு தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரை சட்டப்படி கொடுப்பார்கள். கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழக அரசும் கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரைக் கேட்டுப் பெறும். காவிரி நீரை கர்நாடகா வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
சீமானை எதிர்த்து அரசியல் செய்தால்தான் நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிப்பேன் என்றும் அதனால்தான் நான் அவரைப் பற்றி பேசுவதாகவும் கூறியுள்ளார். அது தவறானது. சீமான் யார் என்றே ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரியாது. அவர்கள் என்றைக்கும் என்னை அழைத்து சீமானுக்கு எதிராக பேசச் சொல்லவில்லை. நானும் சீமானை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததே கிடையாது. விஜயலட்சுமி விவகாரம் குறித்துக் கூட அது அவரது தனிப்பட்ட விஷயம், அதில் கருத்து கூற மாட்டேன் என செய்தியாளர்களிடம்கூறினேன்.
காவிரி விவகாரத்தில் இந்திய ஒற்றுமைக்கு எதிராகவும் கலவரத்தை துண்டும் விதமாகவும் சீமான் பேசுகிறார். இரண்டு மாநிலங்களுக்கு இடையே இனக்கலவரத்தை உருவாக்கும் விதமாக அவருடைய பேச்சு உள்ளது. இது நல்ல அரசியலே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.