“கருணாநிதிக்கு சமாதி கட்ட 100 கோடி ரூபாய் இருக்கும் அரசாங்கத்திடம், பாவப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லையா?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பினார்.
சென்னையில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 5-வது நாளை தாண்டியுள்ளது. இதுவரை 200 ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
5 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்தும், தங்களை முதல்வரோ, கல்வித்துறை அமைச்சரோ அழைத்து பேசாததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த சூழலில், அவர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
அடுத்த தலைமுறைக்கு அறிவை போதிக்கிற ஆசிரியர் பெருமக்களை, வீதியில் இறங்கி போராடும் அளவுக்கு இந்த அரசாங்கம் தள்ளி இருப்பது மிகப்பெரிய கொடுமை. இன்னைக்கு நேத்து இல்ல.. 12 வருடமாக போராடிட்டு வர்றாங்க. இதை மற்ற போராட்டங்களை போல வேடிக்கை பார்க்காமல், முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கேட்டால், நிதி இல்லை.. நிதி இல்லைனு அரசாங்கம் சொல்லுது. என் அக்கா, தங்கை யாராவது எங்களுக்கு மாசம் 1000 ரூபாய் தாங்கனு கேட்டாங்களா? கல்லூரியில் படிக்கும் என் தங்கைகள் மாசம் 1000 ரூபாய் கொடுக்கனு சொல்லி போராட்டம் நடத்துனாங்களா? இல்லையே. ஆனால் கேட்காமல் இருப்பவர்களுக்கு பணம் கொடுக்க உங்களிடம் நிதி இருக்கு. கருணாநிதிக்கு கடலில் சமாதி கட்ட உங்களிடம் 100 கோடி ரூபாய் இருக்கு. மதுரை நூலகத்தை கட்ட 250 கோடி ரூபாய் இருக்கு. ஆனால், தங்கள் வாழ்வாதரத்துக்காக போராடுற பாவப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் உங்கள்ட்ட நிதி கிடையாது இல்லையா? என சீமான் கேள்வியெழுப்பினார்.