சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தவறான நடைமுறை, அது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. பீகார் மாநில அரசு நாட்டிலேயே முதன் முறையாக சாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பீகார் மாநில அரசு மேற்கொண்டதைப் போலவே தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். பீகார் மாநில அரசு மேற்கொண்டிருப்பதைப் போல எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி. கோவையில் இன்று செய்தியாளர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கவில்லை. சுதந்திரம் பெற்று 77வது ஆண்டில் இருக்கிறோம். இன்னும் இந்திய மக்களை சாதி ரீதியாக பார்த்துத்தான் அந்த மக்களை மேம்படுத்த வேண்டும் என்று சொன்னால் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்கிறார்கள் என்று கருதவேண்டி இருக்கிறது. மக்களை சாதி ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக, இன ரீதியாக பிரிப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. சமத்துவமும், சம உரிமையும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. மக்களின் தேவைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டு, மீண்டும் சாதிரீதியாக கணக்கெடுப்பு எனக் கூறுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? ஆட்சியாளர்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டு, இப்போதும் சாதி ரீதியான கணக்கெடுப்பு எதற்கு? சாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவைக் துண்டாடக்கூடியது, மக்களிடையே பிளவு எண்ணங்களை உருவாக்ககூடியது. இது தவறான நடைமுறை. இட ஒதுக்கீடு மூலம் மட்டுமே தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முடியாது. தூய்மையான அரசால் மட்டுமே எந்தவித பேதமும் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.