பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் நியூஸ் க்ளிக் மீது அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில், நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும், பத்திரிகை ஊடகங்கள் செயல்பாட்டை முடக்கும் பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் நிறுவனம் பணம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்நிறுவனம் பணம் பெற்றது என குற்றம்சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கின் அடிப்படையில் டெல்லியில் நேற்று போலீசார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்தனர். பின்னர் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நியூஸ் கிளிக் செய்தி இணையதள நிறுவனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு “இந்தியா” கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பாஜக அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் ஊடகங்கள் தொடர்ந்து மத்திய அரசால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளாகி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தின் மீது மத்திய அரசு தாக்குதலை தொடுத்துள்ளது. டெல்லியில் நியூஸ் க்ளிக் இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது. 2021ஆம் ஆண்டு நியூஸ் க்ளிக் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கி முறைகேடு செய்ததாகவும் குற்றம்சாட்டினர். பின்னர் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம், நியூஸ் க்ளிக் மற்றும் அதன் உரிமையாளர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதையடுத்து அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில், சீனாவிலிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு நியூஸ் க்ளிக் பா.ஜ.க அரசுக்கு எதிராகச் செய்திகளை வெளியிட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஒருவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் நியூஸ் க்ளிக் இணையதளத்திற்கு எதிராகவே கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நியூஸ் க்ளிக் இணைய தளத்திற்குத் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு திடீரென ஆய்வு செய்துள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு பத்திரிகையாளர்களின் மடிக்கணினி, செல்போன்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பாஷா சிங், உர்மிலேஷ், ஆனின்டியோ சக்ரவர்த்தி, வீடியோகிராபர் அபிஷர் சர்மா, எழுத்தாளர் கீதா ஹரிகரன் உட்பட பலரது வீடுகளிலும் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். பத்திரிகையாளர்கள் அனுராதா ராமன், சத்யம் திவாரி, ஆதித்தி நிகாம் மற்றும் சுமேதா பால் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்துக்கு கட்டுரைகள் அனுப்பிய மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலர் தீஸ்தா சீத்தால்வாட் வீட்டில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தி விசாரித்தனர். மூத்த பத்திரிக்கையாளர்கள் பரன்ஜாய் குஹா தகுர்தா, சுமோத் வர்மா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம், 2 குழுக்களுக்கு இடையேவிரோதத்தை ஏற்படுத்தியது, குற்றசதி என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சீனா தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் ரூ.38 கோடி பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இருவரும் 7 நாள் காவல்துறையினரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 40-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறை மிரட்டல் விசாரணை நடத்தி உள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி இல்லத்திலும் டெல்லி காவல்துறை சோதனை நடத்தி இருக்கிறது. கடந்த மாதம் பிபிசி செய்தி நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசின் தாக்குதல் நடந்தது. நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பத்திரிக்கை ஊடக சுதந்திரத்தை நசுக்கி வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படும் பத்திரிகை ஊடகங்கள் செயல்பாட்டை முடக்கும் பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது. இதனை முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் இன்றியமையாத கடமையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.