வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும்: ஜான் பாண்டியன்

ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மூன்றாவது மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஃபேன்சி கடையில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை காந்திமதி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்கு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உடன் பணி செய்யும் நபர்கள் குடோனுக்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சந்தியா கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்ப வறுமையை போக்குவதற்காக இவர் மேல்படிப்பு படிக்காமல் பணிக்கு சென்றுள்ளார். சொற்ப வருமானத்திற்கு இவர் வேலைக்கு சென்றாலும் பொறுப்பாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தான் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த கீழமுனைஞ்சிபட்டி அருகேயுள்ள தோப்பூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் சந்தியாவிடம் காதலை கூற; காதலை ஏற்க மறுத்ததால் சந்தியா வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ”

பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கவேண்டும். அதற்கு சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் இச்சம்பவத்தை கண்டிக்கவேண்டும். குறிப்பாக வழக்கறிஞர்கள் இச்சம்பவத்தை கண்டிக்கின்ற வகையில் குற்றவாளிக்காக வாதாட மாட்டோம் என்ற உறுதியை எடுக்க வேண்டும். ஏனென்றால் இது போன்ற குற்றவாளிகள் சமூகத்தில் தனிமைபடுத்தப்பட வேண்டும். சாதி, மதம் பாராமல் இளம்பெண்ணை வெட்டி படுகொலை செய்த ராஜேஷ் கண்ணன் என்பவரை சிறையில் அடைப்பதுடன் பிணை வழங்காமல் சிறையில் வைத்து வழக்கினை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க காவல்துறை நீதித்துறை இணைந்து விரைந்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கிட வேண்டும்.

இச்சமூகத்தில் பெண் பிள்ளைகள் வெளியே வர அச்சப்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. பெற்ற பெற்றோர்களுக்கு தான் தெரியும் அதனின் வலியும், வேதனையும். இனி ஒரு பெற்றோருக்கு அல்லது ஒரு பெண்ணிற்கு இந்த பயம் வரக்கூடாது அதற்கு ஒரே வழி சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும் போது பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழக காவல் துறையும், தமிழக அரசும் எவ்வாறு முனைப்பு காட்டியதோ அதனை போன்று, இச்சம்பவத்தில் முனைப்பு காட்டிட வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். சந்தியாவிற்கு நீதி கிடைத்திட சாதி, மதம் கடந்து அனைவரும் ஒன்றாக நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.