காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது: அண்ணாமலை

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல் நடந்து கொண்டிருக்கும் விதத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. அரசியலமைப்பு மீது சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக் கூடிய முதல்வராக இவர் இருப்பாரா?

அதே நேரத்தில் நாம் காங்கிரஸ் கட்சியினுடைய இரட்டை நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களை முட்டாளாக்கிவிடுவோம் என காங்கிரஸ் கங்கணம் கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனிடம் சோனியா காந்தி 1999 ஆம் ஆண்டு சந்திக்க நேரம் கேட்டிருந்தார். குறிப்பாக நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என கோருவதற்காக சோனியா நேரம் கேட்டிருந்தார். பிரியங்கா காந்தி ராஜீவ் கொலையாளிகளை நான் மன்னித்துவிட்டேன் என்கிறார். உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி தலைவரை இழந்திருக்கும் வருத்தத்திலும் கொலையாளி வெளியே வந்த கோபத்திலும் இருந்திருந்தால் திமுகவுடனான ஆதரவை முறித்து கொள்ள வேண்டும். இதை விட காங்கிரஸ் கட்சிக்கு சித்தாந்த அடிப்படையில் என்ன இருக்க முடியும்? ஒரு மணி நேரம் வாயில் துணியை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்திய விட்டு மறுநாள் காலை ராஜ்யசபா சீட்டுக்காக அறிவாலயத்தில் நிற்போம் என கூறி காங்கிரஸ் தமிழக மக்களை முட்டாளாக்குகிறது.

பாஜகவை பொருத்தவரை 7 பேரும் கொலையாளிகள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. பேரறிவாளன் இத்தனை நாட்கள் சிறையில் இருந்துவிட்டதால் அவரை சட்டபடி வெளியே விட்டிருக்கிறார்களே தவிர அவர்கள் கொண்டாட வேண்டியவர்கள் கிடையாது. ராஜீவ் காந்தி இறந்த அன்று 17 பேர் இறந்துள்ளனர். அதில் மிக முக்கியமானது அப்பாவி போலீஸார் 8 பேர் இறந்துள்ளனர். அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் இக்பால், அவருடைய பிறந்தநாளிலேயே இறந்துவிட்டார். இவர்களுக்கான நியாயம் எங்கே?

திமுக நேற்று முதல் வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்திருக்கிறது. காங்கிரஸும் ஒப்புக்கு சப்பானியாக ஏதோ எதிர்ப்பை காட்ட வேண்டும் என நேற்றுமுன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. சோனியா போடும் வேடம் வேறு. பிரியங்கா காந்தி போடும் வேடம் வேறு. தமிழகத்தில் கே.எஸ். அழகிரி போட்டு கொண்டிருக்கும் வேடம் வேறு. இவற்றை தமிழக மக்கள் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு முன்பே சட்டசபை தேர்தலுக்கு முன்பே பேரறிவாளனுக்கு 142 சட்டவிதியின் கீழ் விடுதலை கொடுக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது. இந்த முடிவு 11 மாதங்கள் தாமதமாகிவிட்டது. ஏதோ காக்கா உட்கார பனங்காய் கீழே விழுந்த கதையாக மாறியுள்ளது. வெளியே வந்துவிட்டார், அவருக்கான வாழ்க்கையை வாழட்டும். ஆனால் அவரை கொண்டாடி திமுக வருங்கால இளைஞர்களுக்கு தப்பான முன்னுதாரணத்தை காட்ட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.