திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐடி ரெய்டு!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகங்கள், சொகுசு விடுதிகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள சொகுசு விடுதி, பள்ளிக்கரணையில் உள்ள பல் மருத்துவமனை மற்றும் பல இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

பாஜக அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகள் மூலம் எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாக நாடு முழுவதும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. டெல்லி, மேற்கு வங்கம், பீகார், தெலங்கானா என பல மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜென்சிகள் எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பாஜக அரசை கடுமையாக எதிர்த்து வரும் திமுக மீது அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமனி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டது.

இந்த சூழலில் வருமான வரித்துறையினர் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியாக கவனம் பெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஜெகத்ரட்சகனுக்கு எதிராக ஏற்கனவே சில சொத்து, வருமான வழக்குகள் உள்ளன. இப்போது நடக்கும் ரெய்டு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நடக்கிறது அல்லது எந்த வழக்கின் அடிப்படையில் நடக்கிறது என்ற விவரம் வெளியாகவில்லை. ரெய்டு நடக்கும் இடங்களில் அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். 40 இடங்களில் நடக்கும் ரெய்டு இனி மேலும் பல இடங்களில் உயரும் வாய்ப்புகள் உள்ளன. அதிகாலையே நடக்கும் இந்த ரெய்டு திமுக தரப்பை அதிர வைத்துள்ளது.