“இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்தக் காலத்திலும் நிறைவேறாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, கோயில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாக பயன்படுத்தி வருகிறது, இது ஒரு அநீதி. சாதிவாரிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக உரிமை எழுப்பும் காங்கிரஸ் கட்சி கோயில்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துமா?’ என்று தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தேவையற்ற சர்ச்சையை எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருப்பதைவிட தமிழகத்தில் கோயில் நிர்வாகம் என்பது இந்து சமய அறநிலையத் துறை என்ற அமைப்பின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1927-ம் ஆண்டிலேயே சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1951-லும், பிறகு 22 ஜனவரி 1959-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழகத்திலுள்ள கோயில்கள் அனைத்தும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய நிர்வாகத்தின் மூலம் கோயில்கள் என்பது யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று கடவுளை தரிசிக்கவும், வழிபடவும் முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 1931-ம் ஆண்டிலேயே ஆலயங்களில் அரிஜன பிரவேசம் மறுக்கப்பட்ட போது மதுரை வைத்தியநாத ஐயர் மீனாட்சி அம்மன் கோயிலில் தியாகி கக்கன் உள்ளிட்ட அம்மக்களை அழைத்துக் கொண்டு போராட்டம் நடத்திய வரலாற்றை பிரதமர் மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக ராமானுஜர், வள்ளலார், பெரியார் ஆகியோர் சமய சீர்திருத்த கருத்துகளை பரப்பி, கோயில்களில் வழிபாட்டு உரிமையை பெற்றுத் தந்த வரலாற்றுப் பெருமை தமிழகத்துக்கு உண்டு. அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் எந்த பாகுபாடும், தவறுகளும், தனிப்பட்ட சிலருடைய ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்துகிற வகையில் இந்து சமய அறநிலையத்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பி. பரமேஸ்வரனை நியமித்து புரட்சி செய்ததை எவரும் மறந்திட இயலாது. அத்தகைய நியமனத்தின் மூலம் எந்த கோயில்களில் நுழைய எந்த சமுதாயம் மறுக்கப்பட்டதோ, அதே சமுதாயத்தைச் சேர்ந்தவரை அமைச்சராக நியமித்து கோயில்களில் அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்ற காட்சியை பார்த்து நாடே மகிழ்ந்தது. இந்து மதத்துக்குள்ளாக இருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, சனாதன அணுகுமுறையை புறக்கணிக்கிற பணியை தமிழகம் நீண்ட காலமாக செய்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு நியமிக்கப்பட்டு இந்து கோயில்களில் ஓர் ஆன்மிகப் புரட்சியே நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 36,425 கோயில்களும், 56 மடங்களும், ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலங்களையும் இன்றைக்கு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. இவர் அமைச்சராக பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் தனியார் வசமிருந்து ரூபாய் 5137 கோடி மதிப்புள்ள கோயில்கள் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான திருக்கோயில்களில் குடமுழுக்குகள், வருமானம் இல்லாத கோயில்கள் அனைத்திலும் ஒருகால பூஜை நடத்துவதற்கு நிதியுதவியும், எல்லாவற்றுக்கும் மேலாக பெரியாரின் கனவை நினைவாக்குகிற வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் பெண்கள் உள்ளிட்ட பலர் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கோயிலின் கர்ப்ப கிரகத்துக்குள் நுழையக் கூடாது, கோயில் கொடி மரத்தை தாண்டி உள்ளே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட்டு கோயிலுக்குள் அனைத்து சாதியினரும் வேறுபாடின்றி உள்ளே நுழைந்து வழிபடுகிற உரிமையை பறிக்கிற வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இத்தகைய அநீதிகள் எல்லாம் கோயில்கள் ஒருசில தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போது நடைபெற்றது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடவுளை தரிசிக்க நந்தனாருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, அதற்காக தீக்குளித்து உயிர் நீத்த வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இத்தகைய மாபெரும் புரட்சியை ஒட்டித்தான் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அனைவருக்கும் பொதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை ஏன் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை இருப்பதைப் போல, பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு வஃக்பு வாரியம் என்ற அரசுத்துறை உண்டு. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் போல இதற்கும் அமைச்சர் உண்டு. தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு இருப்பதை போல வஃக்பு வாரிய துறைக்கு செஞ்சி மஸ்தான் இருக்கிறார். இதற்கொன செயலாளராக தனி ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு அனைத்து பள்ளிவாசல் மற்றும் தர்காக்களை நிர்வகித்து வருகின்றனர். சமயத்தின் அடிப்படையில் இங்கே என்ன பாரபட்சம் உள்ளது என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்த காலத்திலும் நிறைவேறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.