உலகிலேயே மோசமான சர்வாதிகாரி இடி அமீனையே மு.க. ஸ்டாலின் மிஞ்சிவிட்டார்: ஜெயக்குமார்

உலகிலேயே மோசமான சர்வாதிகாரி என்றால் அது இடி அமின். இன்றைக்கு அந்த இடி அமீனையே மு.க. ஸ்டாலின் மிஞ்சிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீஸார் நேற்று அதிகாலை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னையில் பல இடங்களில் உள்ள சமுதாயக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல இடங்களில் தண்ணீர் வசதியும், கழிப்பறை வசதிகளும் கூட இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பார்க்கச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-

இன்றைக்கு மிக மோசமான சர்வாதிகாரியாக முதல்வர் ஸ்டாலின் மாறியிருக்கிறார். உலகிலேயே மிகக் கொடூரமான சர்வாதிகாரியான இடி அமினை விட மோசமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கையிலேயே என்ன சொல்லி இருந்தீர்கள்? இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலை சம ஊதியம் தருவோம்; பகுதிநேர ஆசிரியர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்; டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என உங்கள் (திமுக) தேர்தல் வாக்குறுதியில் நீங்கள் கூறியிருக்கிறீர்களா இல்லையா?

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்லிதானே ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். நீங்கள் சொல்லாததை ஏதும் செய்ய சொன்னார்களா.. இல்லையே. போராட்டம் நடத்தியதற்காக, அறிவை கற்பிக்கும் ஆசிரியர்களை மனிதர்களாக கூட மதிக்காமல் ஏதோ ஆடு மாடுகளை போல தூக்கி வந்து இப்படி அடைத்து வைத்திருக்கிறீர்களே.. உங்களுக்கு எல்லாம் மனசாட்சி கிடையாதா? இதற்கு எல்லாம் சேர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.