ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவம்பர் 7-க்கு ஒத்திவைப்பு!

அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்க கோரிய வழக்கு நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதுமாக செயல்பட்டு வருகிறாா். இது தொடா்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொது செயலா் என என்னை தோ்தல் ஆணையமும் உயா்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வம் கூறிவருகிறாா். இது தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அதிமுகவின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சிக் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீா்செல்வமும் அவரது ஆதரவாளா்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும்வரை, அவா்கள் அதிமுகவின் பெயா், சின்னம், கொடி ஆகியவற்றைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா முன்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இதுவரை பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று இபிஎஸ் தரப்பு கூறியது.

கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.