பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால் பெரும்பாலான இந்திய குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளன. பணவீக்கம், கடன் சுமை அதிகரிப்பு போன்றவை இந்திய குடும்பங்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்களின் வருமானமும் குறைந்து போயுள்ளது. இது, மக்களின் சேமிப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
2023-ம் நிதியாண்டில் நிகர குடும்ப சேமிப்பு 5-ல் ஒரு பங்கு குறைந்துள்ளது. அதேநேரம், 2023 நிதியாண்டில் வீட்டு வசதி சாராத கடன்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது. இது, மக்கள் தங்கள் தேவைக்காக வங்கப்பட்ட கடனாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. 2022-23-ம் ஆண்டுக்கான நுகர்வு செலவின கணக்கெடுப்பை மோடி அரசு வெளியிடவில்லை ஏன் என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது. பிரதமர் மோடி உருவாக்கிய பொருளாதார குளறுபடிகளின் தீவிரத் தன்மையை பெரும்பாலான இந்திய குடும்பங்கள் எதிர்கொள்ள தொடங்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.